செவ்வாய் கிரகத்துக்கு ஹெலிகாப்டர் ‘நாசா’ அனுப்புகிறது


செவ்வாய் கிரகத்துக்கு ஹெலிகாப்டர் ‘நாசா’ அனுப்புகிறது
x
தினத்தந்தி 13 May 2018 12:00 AM GMT (Updated: 12 May 2018 7:54 PM GMT)

அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு ‘நாசா’, முதல்முறையாக செவ்வாய் கிரகத்துக்கு ஹெலிகாப்டரை அனுப்பி வைக்க முடிவு செய்து உள்ளது.

வாஷிங்டன், 

அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு ‘நாசா’, முதல்முறையாக செவ்வாய் கிரகத்துக்கு ஹெலிகாப்டரை அனுப்பி வைக்க முடிவு செய்து உள்ளது.

இதற்காக ஒரு குழுவினர், 4 ஆண்டு காலம் உழைத்து, சிறிய அளவிலான ஹெலிகாப்டரை வடிவமைத்து அதன் எடையை 1.8 கிலோ அளவுக்கு குறைத்து உள்ளனர்.

இந்த ஹெலிகாப்டர் பூமியை விட 100 மடங்கு மெல்லிய செவ்வாய் கிரகத்தின் காற்று மண்டலத்தில் பறப்பதற்கு உகந்ததாக உருவாக்கப்பட்டு உள்ளது.

இது பற்றி ‘நாசா’ நிர்வாகி ஜிம் பிரைடன்ஸ்டைன் கூறும்போது, “மற்றொரு கிரகத்தின் வான்வெளியில் ஹெலிகாப்டரை பறக்க விடுவது என்பது மெய் சிலிர்க்க வைக்கக்கூடியதாக அமைந்து உள்ளது” என்று குறிப்பிட்டார்.

மேலும் அவர் கூறும்போது, “நமது வருங்கால அறிவியல், கண்டுபிடிப்பு, செவ்வாய் கிரக ஆராய்ச்சி திட்டங்களை உறுதி செய்ய இந்த ஹெலிகாப்டர் உதவும்” என்றார்.

‘ட்ரோன்’ என்று அழைக்கப்படக்கூடிய ஆளில்லாத விமானத்துக்கு பதிலாக பறக்க உள்ள இந்த ஹெலிகாப்டருக்கு விமானி கிடையாது.

பூமியில் இருந்து இந்த ஹெலிகாப்டர் 5½ கோடி கி.மீ. தொலைவுக்கு பறக்கும். எனவே ‘ரிமோட் கண்ட்ரோல்’ சமிக்ஞை எதையும் அனுப்புவதற்கு முடியாது.

2020-ம் ஆண்டு ஜூலை மாதம் ரோவருடன் இணைத்து அனுப்பப்படுகிற இந்த ஹெலிகாப்டர், செவ்வாய் கிரகத்தை 2021-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் சென்று அடையும் என்று ‘நாசா’ விஞ்ஞானிகள் எதிர்பார்க்கிறார்கள்.

Next Story