இந்தோனேஷியா தேவாலயங்களில் தற்கொலைதாரிகள் தாக்குதல், 11 பேர் உயிரிழப்பு, 41 பேர் காயம்


இந்தோனேஷியா தேவாலயங்களில் தற்கொலைதாரிகள் தாக்குதல், 11 பேர் உயிரிழப்பு, 41 பேர் காயம்
x
தினத்தந்தி 13 May 2018 8:40 AM GMT (Updated: 13 May 2018 8:40 AM GMT)

இந்தோனேஷியாவில் தேவாலயங்களில் தற்கொலைதாரிகள் நடத்திய தாக்குதலில் 11 பேர் உயிரிழந்து உள்ளனர். #Indonesia


ஜகார்த்தா,

உலகில் இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் இந்தோனேஷியாவின், இரண்டாவது பெரிய நகரமான சுரபயாவில் மூன்று கிறிஸ்தவ தேவாலயங்களை குறிவைத்து தற்கொலை வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. முதலில் சாண்டா மரியா ரோமன் கத்தோலிக்க திருச்சபையில் மோட்டார் சைக்கிளில் சென்ற தற்கொலைதாரி வெடிகுண்டை வெடிக்கசெய்து உள்ளான். இதில் தற்கொலைதாரி உள்பட 4 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து கிறிஸ்தவ சர்ச் ஆஃப் திபோனேகோரா மற்றும் பாண்டேகோஸ்டா சர்ச்சில் தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. இந்த தாக்குதல்களில் 11 பேர் உயிரிழந்து உள்ளனர், போலீசார் உள்பட 41 பேர் காயம் அடைந்து உள்ளனர் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

காயம் அடைந்தவர்கள் பல்வேறு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்தோனேஷியாவில் கடந்த 2000-ம் ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது கிறிஸ்தவர்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதில் 15 பேர் உயிரிழந்தனர், 100-க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர், இப்போது அதுபோன்ற மோசமான தாக்குதல் கிறிஸ்தவர்களை குறிவைத்து நடத்தப்பட்டு உள்ளது. மத அடிப்படையில் அங்கு சிறுபான்மையினராக இருக்கும் கிஸ்தவர்கள் தொடர்ந்து பயங்கரவாதிகளால் இலக்காக்கப்பட்டு வருகிறார்கள். 

இரு குழந்தைகளுடன் பெண் ஒருவர் உள்பட 5 பேர் இந்த தற்கொலை வெடிகுண்டு தாக்குதல்களை நடத்தி உள்ளார்கள் என போலீஸ் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. தாக்குதலுக்கான உள்காரணம் மற்றும் பிற விபரங்கள் தொடர்பாக அதிகாரிகள் பேச மறுத்துவிட்டார்கள். தற்கொலை வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்ட பகுதியை கட்டுக்குள் கொண்டுவந்து உள்ள போலீஸ் தீவிரமாக விசாரித்து வருகிறது. பாலியில் கடந்த 2002-ம் ஆண்டு அல்-கொய்தாவுடன் தொடர்புடைய பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 202 பேர் கொன்று குவிக்கப்பட்டார்கள், இதனையடுத்து பயங்கரவாதத்திற்கு எதிராக அந்நாட்டு அரசு ஸ்திரமான நடவடிக்கையை மேற்கொண்டது.

மத்திய கிழக்கு நாடுகளில் ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தின் வளார்ச்சி, தொடர்பு உள்ளூர் பயங்கரவாத குழுக்களுக்கு புத்துணர்வு கிடைத்ததால் இந்தோனேஷியா புது எச்சரிக்கையை எதிர்க்கொண்டு உள்ளது.

Next Story