ஈரானில் 18 பேரை கொன்று குவித்த 8 பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை


ஈரானில் 18 பேரை கொன்று குவித்த 8 பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை
x
தினத்தந்தி 13 May 2018 11:00 PM GMT (Updated: 13 May 2018 8:33 PM GMT)

ஈரானில் 18 பேரை கொன்று குவித்த தாக்குதலில் தொடர்பு உடைய 8 பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை விதித்து டெக்ரான் இஸ்லாமிய புரட்சிகர கோர்ட்டு நேற்று தீர்ப்பு அளித்தது.

டெஹ்ரான்,

ஈரான், ஷியா பிரிவினரை பெரும்பான்மையாக கொண்ட நாடு. அங்கு சன்னி பிரிவை சேர்ந்த ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பினரை ஒடுக்க ராணுவத்தை ஈரான் அரசு பயன்படுத்துகிறது. இதனால் ஈரான் அரசு மீது அவர்கள் ஆத்திரம் கொண்டுள்ளனர்.

இந்த நிலையில், தலைநகர் டெக்ரானில் உள்ள பாராளுமன்றத்திற்குள் கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் ஒரு நாளில், 4 பேர் கைத்துப்பாக்கிகளையும், ஏ.கே. 47 ரக துப்பாக்கிகளையும் ஏந்தியவாறு, அதிரடியாக நுழைந்தனர்.

அங்கு அவர்கள் கண்மூடித்தனமான தாக்குதல் நடத்தி விட்டு, பாராளுமன்றத்தில் இருந்து சற்று தொலைவில் உள்ள நவீன ஈரானின் நிறுவனரான அயத்துல்லா கொமேனியின் நினைவிடத்திலும் தாக்குதல் நடத்தினர்.

இவ்விரு தாக்குதல்களிலும் 18 பேர் கொன்று குவிக்கப்பட்டனர்.

இந்த தாக்குதல்களுக்கு ஐ.எஸ். பயங்கரவாதிகள் பொறுப்பேற்றனர்.

இந்த தாக்குதல்களில் தொடர்பு உடைய 8 பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை விதித்து டெக்ரான் இஸ்லாமிய புரட்சிகர கோர்ட்டு நேற்று தீர்ப்பு அளித்தது.

தண்டிக்கப்பட்ட பயங்கரவாதிகள் இந்த தண்டனையை எதிர்த்து அந்த நாட்டின் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்ய முடியும்.

இந்த வழக்கில் இன்னும் 18 பேர் மீது நீதிமன்ற விசாரணை நடந்து வருகிறது.

Next Story