இலங்கையில் திடீர் வெள்ளம்: 8000 மக்கள் பாதிப்பு


இலங்கையில் திடீர் வெள்ளம்: 8000 மக்கள் பாதிப்பு
x
தினத்தந்தி 14 May 2018 11:28 AM GMT (Updated: 14 May 2018 11:28 AM GMT)

இலங்கையில் ஏற்பட்டுள்ள திடீர் வெள்ளத்தினால் 8000 மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். #SriLankaFlood

கொழும்பு,

இலங்கையில் நேற்று பெய்த பேய் மழை காரணமாக திடீரென வெள்ளம் ஏற்பட்டு நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பேரழிவு ஏற்பட்டுள்ளது. நேற்று முழுதும் பெய்த பலத்த மழையால் கல்லே மற்றும் கலுடாரா மாவட்டங்களிலிருந்து சுமார் 8377 மக்கள் வெளியேற்றப்பட்டுள்ள நிலையில் இன்று காலை முதல் மழை சற்று ஓய்ந்திருப்பதாக பேரழிவு நிர்வாக மைய செய்தி தொடர்பாளர் ப்ரதீப் கோடிப்பிள்ளி கூறியுள்ளார். 

வெள்ள நிலவரம் குறித்து செய்தி தொடர்பாளர் ப்ரதீப் கோடிப்பிள்ளி மேலும் கூறுகையில், “மழை வெள்ளம் அதிகம் பாதிக்கப்பட்ட கல்லே மாவட்டத்தில் 7742 பேரும், கலுடாரா மாவட்டத்தில் 635 பேரும் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வெள்ள சேத நிலவரங்கள் குறித்து இன்னும் எந்த தகவல்களும் வெளியிடப்படவில்லை. மேலும் மழை தொடர வாய்ப்புள்ளதால் தாழ்வான பகுதிகளில் இருக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு கேட்டுகொள்கிறேன்” எனக் கூறினார்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள திடீர் வெள்ளத்தால் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. மேலும் மழை வெள்ளத்தில் மூழ்கி பயிர்கள் பெருமளவு சேதமடைந்துள்ளன. இதனிடையே கடந்த ஆண்டு இலங்கையில் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 96 பேர் பலியாகினர். மேலும் 110 பேர் காணாமல் போயினர். மேலும் நாட்டின் 7 மாவட்டங்களில் சுமார் 20000 க்கும் அதிகமான மக்கள் வீடுகளை இழந்து தவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story