கிம் ஜாங் உன் உடன் சந்திப்பு பொறுத்திருந்து பார்போம் -டொனால்டு டிரம்ப்


கிம் ஜாங் உன் உடன் சந்திப்பு பொறுத்திருந்து பார்போம் -டொனால்டு டிரம்ப்
x
தினத்தந்தி 18 May 2018 6:45 AM GMT (Updated: 18 May 2018 8:22 AM GMT)

வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன்- உடன் சந்திப்பு குறித்து பொறுத்திருந்து பார்போம் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் கூறினார்.

வாஷிங்டன்

உலகநாடுகளின் எதிர்ப்புகளை மீறி வடகொரியா தொடர்ந்து கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனைகளை மேற்கொண்டு வந்தது. அதன் பின் அந்நாட்டின் மீது விடுக்கப்பட்ட பொருளாதார தடைகளுக்கு பின், வடகொரியா தன்னுடைய பிடிவாதத்திலிருந்து பின் வாங்கியது. இதையடுத்து தென் கொரியாவுடன் பேச்சுவார்த்தை, தங்கள் நாட்டின் அணு ஆயுத சோதனைகளை அழிப்பது போன்ற முடிவுகளை வடகொரியா திடீரென்று எடுத்தது.

இதைத் தொடர்ந்து அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் மற்றும் வடகொரியா ஜனாதிபதி கிம் ஆகியோரின் சந்திப்பு சிங்கப்பூரில் ஜூன் 12-ஆம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், லிபியாவில் நடந்ததைப் போல் வட கொரியா அனைத்து அணு ஆயுதங்களையும் ஒப்படைத்தால் மட்டுமே அந்த நாட்டின் மீதான பொருளாதாரத் தடை நீக்கப்படும் என்று அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்ட்டன் கூறியதாக தகவல்கள் வெளியாகின.

இதனால் அதிருப்தியடைந்த வட கொரியா, அணு ஆயுத ஒழிப்பு விவகாரத்தில் அமெரிக்கா தன்னிச்சையாக நடந்து கொண்டால் டிரம்ப்-கிம் இடையிலான பேச்சுவர்த்தை ரத்து செய்யப்படும் என்று எச்சரிக்கை விடுத்திருந்தது. இதனால் பேச்சுவார்த்தை நடைபெறுமா என்ற கேள்வி எழுந்ததால், இது குறித்து டிரம்பிடம் பத்திரிக்கையாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். அதற்கு அவர், ஜூன் 12-ஆம் தேதி சிங்கப்பூரில் நடைபெறவிருக்கும் சந்திப்பை ரத்து செய்வது குறித்து வட கொரியாவிடமிருந்து இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. எனவே, இதுகுறித்து பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் இல்லையென்றால் அடுத்தக்கட்டத்தை நோக்கி நகரவேண்டும்  என்று கூறியுள்ளார்.

Next Story