பட்டத்து இளவரசர் படுகொலை? செய்தி வெளியிட்ட ஈரான் ஊடகங்கள்; சவுதி அரேபியா மறுப்பு


பட்டத்து இளவரசர் படுகொலை? செய்தி வெளியிட்ட ஈரான் ஊடகங்கள்; சவுதி அரேபியா மறுப்பு
x
தினத்தந்தி 24 May 2018 6:23 AM GMT (Updated: 24 May 2018 6:23 AM GMT)

சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என ஈரான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சவுதியின் பட்டத்து இளவரசர் சல்மான் கடந்த மாதம் 21 ஆம்தேதிக்கு பின்னர் இதுவரை பொதுவெளியில் எங்கும் காணப்படவில்லை எனவும், அரச குடும்பத்தில் அவருக்கு எதிரானவர்களால் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனவும் அல்லது ஆளில்லாத விமான தாக்குதலில் அவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வரலாம் எனவும் சந்தேகம் எழுப்பியுள்ளது. இந்த தகவல் சவுதி முழுக்க தீயாக பரவிய நிலையில், குறித்த யூகங்களுக்கு சவுதி அரச குடும்பம் மறுப்பு தெரிவித்துள்ளதுடன், பட்டத்து இளவரசர் சல்மானின் புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டுள்ளது. 

சமீபத்தில் தலைநகர் ரியாத்தில் அமைந்துள்ள அரண்மனை அருகே கடுமையான துப்பாக்கிச் சூடு சம்பவம் அரங்கேறியுள்ளது. இது பட்டத்து இளவரசருக்கு எதிரணியில் இருப்பவர்களால் தொடுக்கப்பட்ட தாக்குதல் எனவும், இந்த தாக்குதலில் பட்டத்து இளவரசர் சல்மான் கைது செய்யப்பட்டு ரகசிய சிறையில் அடைக்கப்பட்டிருக்கலாம் அல்லது படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என ஈரான் ஊடகங்கள் சந்தேகம் எழுப்பியுள்ளன.

அது மட்டுமின்றி ஏப்ரல் 21 ஆம் தேதி நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 2 துப்பாக்கி குண்டுகளாவது சல்மான் மீது பட்டிருக்கலாம் அல்லது அவர் கொல்லப்பட்டிருக்கலாம்.

அது மட்டுமின்றி கடந்த மாதம் 21 ஆம் தேதிக்கு பின்னர் நடந்த முக்கிய நிகழ்வான அமெரிக்க வெளியுறவு செயலர் மைக் போம்பியோ வருகையின்போது சல்மான் ஏன் கலந்துகொள்ளவில்லை என கேள்வி எழுப்பியுள்ளது. பட்டத்து இளவரசராக பொறுப்பேற்ற பின்னர் இதுவரை எந்த நிகழ்ச்சியையும் சல்மான் தவறவிட்டது இல்லை எனக் கூறும் ஈரான் ஊடகம்,இந்த  நிகழ்வில் சவுதி அரசர் சல்மான் மற்றும் வெளியுறவு அமைச்சரும் மட்டுமே கலந்து கொண்டது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது என குறிப்பிட்டுள்ளது.சுமார் 30 நாட்கள் தொடர்ச்சியாக பொது நிகழ்ச்சியில் சல்மான் கலந்து கொள்ளாமல் இருப்பது தொடர்பில் சவுதி அரேபிய நெட்டிசன்களும் கேள்வி எழுப்பியுள்ளனர். இதனிடையே சவுதி அரச குடும்பம் வெளியிட்டுள்ள பட்டது இளவரசர் புகைப்படத்தை தாங்கள் நம்பவில்லை எனவும் அவர்கள் அழுத்தமாக தெரிவித்துள்ளனர்.

Next Story