சிங்கப்பூரில் அமெரிக்க ராணுவ மந்திரியுடன் மோடி சந்திப்பு


சிங்கப்பூரில் அமெரிக்க ராணுவ மந்திரியுடன் மோடி சந்திப்பு
x
தினத்தந்தி 2 Jun 2018 10:45 PM GMT (Updated: 2 Jun 2018 8:02 PM GMT)

சிங்கப்பூரில் அமெரிக்க ராணுவ மந்திரி ஜெனரல் ஜேம்ஸ் மேட்டிசை பிரதமர் மோடி சந்தித்து பேசினார். அங்கு மகாத்மா காந்தி அஸ்தி கரைத்த இடத்தில் நினைவுச் சின்னத்தையும் திறந்து வைத்தார்.

சிங்கப்பூர்,

பிரதமர் நரேந்திர மோடி சிங்கப்பூரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அங்கு அவர் பாதுகாப்பு தொடர்பான ‘ஷாங்க்ரி லா டயலாக்’ உச்சி மாநாட்டில் கலந்து கொண்டு தலைமை உரை ஆற்றினார்.

இந்த மாநாட்டின் இடையே அவர் அமெரிக்க ராணுவ மந்திரி ஜெனரல் ஜேம்ஸ் மேட்டிசை சந்தித்து பேசினார். மூடிய அறையில் சுமார் ஒரு மணி நேரம் நடந்த இந்த சந்திப்பின்போது, இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உடன் இருந்தார்.

இரு தலைவர்கள் சந்தித்து பேசியது தொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரவீஷ் குமார் டுவிட்டரில் நேற்று வெளியிட்ட பதிவில் பிரதமர் மோடியின் தலைமை உரையின் அடிப்படையில் பிராந்திய பாதுகாப்பு குறித்த முக்கிய வி‌ஷயங்கள், அமெரிக்க ராணுவ மந்திரியுடனான சந்திப்பின்போது விவாதிக்கப்பட்டது என குறிப்பிட்டு உள்ளார்.

சிங்கப்பூரில் உள்ள பழமையான மாரியம்மன் கோவிலுக்கு பிரதமர் மோடி நேற்று சென்று சாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோவில் அர்ச்சகர் நெற்றியில் திலகமிட்டார். பின் பொன் அங்க வஸ்திரம் ஒன்றை அவருக்கு நினைவுப்பரிசாக வழங்கினார்.

இதுபற்றி டுவிட்டரில் பதிவிட்டு உள்ள பிரதமர் மோடி, இந்தியாவுக்கும், சிங்கப்பூருக்கும் இடையேயான துடிப்பான கலாசார தொடர்பை இந்த கோவில் எடுத்துக்காட்டுவதாக தெரிவித்து உள்ளார்.

சிங்கப்பூரில் உள்ள சுலியா மசூதிக்கும் பிரதமர் மோடி சென்றார். அங்கு அவருக்கு பச்சை நிற சால்வை அணிவிக்கப்பட்டது.

பின்னர் அங்கு உள்ள புத்த கோவிலுக்கும் பிரதமர் மோடி சென்று வழிபட்டார்.

அங்கு உள்ள இந்திய தூதரகத்தாலும், இந்திய பாரம்பரிய மையத்தாலும் உருவாக்கப்பட்டு உள்ள கலாசங்கத்தையும் பிரதமர் மோடி திறந்துவைத்தார்.

சிங்கப்பூர் சாங்கி கடற்படை தளத்தையும் அவர், அந்த நாட்டு மந்திரி முகமது மாலிக்கி உஸ்மானுடன் சென்று பார்வையிட்டார். இந்திய கடற்படை மற்றும் சிங்கப்பூர் கடற்படை அதிகாரிகள், மாலுமிகளை சந்தித்து கலந்துரையாடினார்.

தேசப்பிதா மகாத்மா காந்தியின் அஸ்தி கரைக்கப்பட்ட கிளிப்போர்டு பியர்டு என்ற இடத்துக்கு பிரதமர் மோடி சென்று, அங்கு அமைக்கப்பட்டு உள்ள நினைவுச்சின்னத்தை திறந்து வைத்து, மரியாதை செலுத்தினார். அப்போது சிங்கப்பூர் முன்னாள் பிரதமர் கோஹ் சோக் டாங் உடன் இருந்தார்.

இதுபற்றி பிரதமர் மோடி டுவிட்டரில் குறிப்பிட்டு உள்ளார். அதில், ‘‘தேசப்பிதாவின் போதனை உலகமெங்கும் எதிரொலிக்கிறது. அவரது சிந்தனைகளும், கொள்கைகளும் மனித சமூகத்தின் நலனுக்காக நம்மை உழைப்பதற்கு உந்துசக்தியாக அமைந்து இருக்கின்றன’’ என்று கூறி உள்ளார்.


Next Story