முஷரப், பாஸ்போர்ட் இடைநீக்கம்: தேசத்துரோக வழக்கில் நடவடிக்கை


முஷரப், பாஸ்போர்ட் இடைநீக்கம்: தேசத்துரோக வழக்கில் நடவடிக்கை
x
தினத்தந்தி 8 Jun 2018 10:30 PM GMT (Updated: 8 Jun 2018 10:17 PM GMT)

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷரப் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து அவரது பாஸ்போர்ட் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளது.

இஸ்லாமாபாத்,

பாகிஸ்தானில் முஷரப் அதிபராக இருந்தபோது 2007-ம் ஆண்டு, நெருக்கடி நிலையை அமல்படுத்தினார். சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகளை சிறையில் அடைத்தார். 100-க்கும் மேற்பட்ட நீதிபதிகளை பதவி நீக்கம் செய்தார்.

இப்போது, நெருக்கடி நிலையை அமல்படுத்தியதற்காக அவர் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

இந்த வழக்கின் விசாரணை இஸ்லாமாபாத்தில் உள்ள தனிக்கோர்ட்டில் நடந்து வருகிறது.

முஷரப், மருத்துவ சிகிச்சைக்காக செல்வதாக கூறி கடந்த 2016-ம் ஆண்டு, மார்ச் 18-ந் தேதி துபாய் சென்றார். இன்னும் நாடு திரும்பவில்லை.

அவரை கைது செய்து கொண்டு வருவதை உறுதி செய்ய வேண்டும் என்று கடந்த மார்ச் மாதம் கோர்ட்டு உத்தரவிட்டது. அத்துடன் அவரது தேசிய அடையாள அட்டையையும், பாஸ்போர்ட்டையும் இடைநீக்கம் செய்ய வேண்டும் என்றும் ஆணையிட்டது.

அதன்பேரில் இப்போது பாகிஸ்தான் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து உள்ளனர். முஷரப்பின் பாஸ்போர்ட்டும், தேசிய அடையாள அட்டையும் இடைநீக்கம் செய்யப்பட்டு உள்ளன.

அவரது பாஸ்போர்ட் இடைநீக்கம் செய்யப்பட்டு விட்டதால், அவர் வேறு எந்த நாட்டுக்கும் இனி செல்ல முடியாது. அவர் துபாயில் இருப்பதுகூட சட்டவிரோதமாகக் கொள்ளப்படும் என தகவல்கள் கூறுகின்றன.

பாகிஸ்தானைப் பொறுத்தமட்டில் தேசத் துரோக வழக்கில் அதிகபட்சமாக மரண தண்டனை விதிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story