உலக செய்திகள்

புகைப்பழக்கத்தைத் துறக்க விரும்பும் உலகின் வயதான மனிதர்! + "||" + The old man in the world who wants to quit smoking!

புகைப்பழக்கத்தைத் துறக்க விரும்பும் உலகின் வயதான மனிதர்!

புகைப்பழக்கத்தைத் துறக்க விரும்பும் உலகின் வயதான மனிதர்!
உலகிலேயே வயதான மனிதராகக் கருதப்படுபவர், தான் புகைப்பழக்கத்தைத் துறக்க விரும்புவதாகக் கூறுகிறார்.
பிரெடி புளோம் என்ற அந்த முதியவர், தென்ஆப்பிரிக்காவைச் சேர்ந்தவர். தனது வாழ்நாள் முழுவதும் பண்ணையிலும், கட்டுமானத் துறையிலும் தொழிலாளராகப் பணியாற்றினார். பிரெடி விரைவில் உலகின் வயதான நபராக அங்கீகரிக்கப்படுவார் எனத் தெரிகிறது.


இந்நிலையில்தான், புகைப்பழக்கத்தை விட விரும்புவதாக இவர் கூறுகிறார்.

பல ஆண்டுகளுக்கு முன்பே பிரெடி மதுப் பழக்கத்தை விட்டுவிட்டபோதிலும், இன்னும் புகை பிடித்துக்கொண்டிருக்கிறார்.

‘‘நான் சிகரெட்டுகளை பிடிப்பதில்லை. எனது புகையிலையை செய்தித்தாள் துண்டின் உள்ளே வைத்துச் சுருட்டிப் புகைப்பேன். இவ்வாறு ஒருநாளைக்கு இரண்டு, மூன்று முறை புகைப்பேன்’’ என்கிறார் அவர்.

‘‘புகைப்பதை விடப் போகிறேன் என சில சமயம் எனக்குள் சொல்லிக்கொள்வேன். ஆனால், இது என்னை ஏமாற்றும் செயலே. புகை பிடிக்க வேண்டும் என மார்பு கேட்கும். பிறகு நான் புகைபிடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும்’’ என்கிறார்.

இந்தப் பழக்கத்துடன் பிரெடி எப்படி இத்தனை ஆண்டுகளைக் கடந்திருக்கிறார் என்பதே பலருக்கும் எழும் கேள்வி.

முன்னாள் பண்ணைத் தொழிலாளரான இவர், கடந்த மாதம் 114 வயதை அடைந்தார். உலகில் உயிருடன் இருக்கும் மிக வயதான நபர் பிரெடி எனக் கூறப்படுகிறது. ஆனால், இதனை கின்னஸ் உலக சாதனை நிறுவனம் இன்னும் உறுதிப்படுத்தவில்லை.

இந்தப் பட்டத்தை கடைசியாக ஜமைக்காவைச் சேர்ந்த வயலட் மோஸ்பிரவுன் என்ற பெண் வைத்திருந்தார். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தனது 117 வயதில் இறக்கும் வரை இப்பட்டம் அவரிடம் இருந்தது.

தனது நீண்ட வாழ்நாளுக்கான எந்த சிறப்பு ரகசியமும் தம்மிடம் இல்லை என்கிறார், பிரெடி.

‘‘நான் மிகவும் ஆரோக்கியமாக உணர் கிறேன். ஆனால் என் இதயம் பலமாக இருந்தாலும், கால்கள் பலமாக இல்லை. முன்பு போல நடக்க முடியவில்லை’’ -உரத்த, தெளிவான குரலில் பிரெடி பேசுகிறார்.

இன்று ஒரு பிரபலமான நபராகிவிட்டார், பிரெடி. உள்ளூர் மக்கள் முதல் அமைச்சர்கள் வரை பலரும் இவரை வந்து பார்த்துச் செல்கின்றனர்.

48 ஆண்டுகளாக பிரெடியின் மனைவியாக இருக்கும் ஜெனேட்டா, அவரை விட 29 வயது இளையவர்.

பல ஆண்டுகளுக்கு முன்பு முழங்கால் பிரச்சினை காரணமாக ஒரே ஒருமுறை பிரெடி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக ஜெனேட்டா கூறுகிறார்.

தனது கணவரின் உண்மையான வயது குறித்து முதலில் பலருக்கு சந்தேகம் இருந்ததாக ஜெனேட்டா சொல் கிறார்.

‘‘1904-ம் ஆண்டு மே 8-ம் தேதியை, பிரெடியின் பிறந்த தேதியாக பதிவு செய்து ஓர் அடையாள ஆவணத்தை அரசு வழங்கியுள்ளது. அந்த ஆவணமே போதுமானது’’ என்கிறார், மேற்கு கேப்டவுன் சமூக மேம்பாட்டுத் துறையின் செய்தித்தொடர்பாளர் ஷீலே.

தான் பிறந்த இடமான அடிலெய்டை விட்டு இளவயதிலேயே வெளியேறி கேப் டவுனுக்கு குடிபெயர்ந்த பிரெடிக்கு எழுத, படிக்கத் தெரியாது.

இன்றும் தன்னுடைய வேலைகளைப் பெரும் பாலும் தானே பார்த்துக் கொள்ளும் பிரெடி புளோம், பலருக்கும் வியப்பான மனிதராகத் தோன்றுகிறார்.