உலக செய்திகள்

ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சி மாநாட்டின் இடையே சீன அதிபர் ஜின்பிங்குடன் மோடி சந்திப்பு: 2 ஒப்பந்தங்கள் கையெழுத்து + "||" + Modi meeting with Chinese President Jung for talks between Shanghai Cooperation Summit: 2 agreements to sign

ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சி மாநாட்டின் இடையே சீன அதிபர் ஜின்பிங்குடன் மோடி சந்திப்பு: 2 ஒப்பந்தங்கள் கையெழுத்து

ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சி மாநாட்டின் இடையே சீன அதிபர் ஜின்பிங்குடன் மோடி சந்திப்பு: 2 ஒப்பந்தங்கள் கையெழுத்து
ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டின் இடையே சீன அதிபர் ஜின்பிங்கை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து இரு தரப்பு உறவு பற்றி முக்கிய ஆலோசனை நடத்தினார். 2 ஒப்பந்தங்களும் கையெழுத்தாயின.
கிங்தாவோ,

சீனா, இந்தியா, ரஷியா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், பாகிஸ்தான் ஆகிய 8 நாடுகளை உறுப்பு நாடுகளாக கொண்ட ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி, சீனாவுக்கு 2 நாள் பயணம் மேற்கொண்டு உள்ளார். 6 வாரங்களில் அவர் சீனாவுக்கு சென்று இருப்பது இது 2-வது முறை ஆகும்.

கடந்த ஏப்ரல் 27, 28-ந் தேதிகளில் அவர் சீனாவின் வூகன் நகருக்கு சென்று, அந்த நாட்டின் அதிபர் ஜின்பிங்கை முறைசாரா மாநாட்டில் சந்தித்து பேசி இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்துவது பற்றியும், எல்லையில் அமைதி தவழச்செய்வது குறித்தும் விவாதித்தது நினைவுகூரத்தக்கது.

இந்த நிலையில் ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சி மாநாட்டுக்காக பிரதமர் மோடி நேற்று மதியம் 1.20 மணிக்கு கிங்தாவோ நகருக்கு போய் சேர்ந்தார். அங்கு அவருக்கு உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது.

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில், இந்தியா உறுப்பு நாடாக ஆன பின்னர் இந்திய பிரதமர் ஒருவர், இந்த உச்சிமாநாட்டில் பங்கேற்பது இதுவே முதல் முறை ஆகும்.

இந்த மாநாட்டின் இடையே பிரதமர் மோடி, சீன அதிபர் ஜின் பிங்கை சந்தித்தார். இருவரும் மகிழ்ச்சியுடன் கைகுலுக்கிக்கொண்டு, புகைப்படத்துக்கு ‘போஸ்’ கொடுத்தனர்.

அதைத் தொடர்ந்து பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜின்பிங்கும் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையின் தொடக்கத்தில் பிரதமர் மோடி, சீன அதிபர் ஜின்பிங்கிடம், இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையேயான வலுவான, உறுதியான உறவுகள் நிலையான மற்றும் அமைதியான உலகத்தை ஊக்குவிக்கும் என்று கூறினார்.

வூகனில் நடந்த முறைசாரா உச்சிமாநாட்டின்போது பேசப்பட்ட விஷயங்களை பிரதமர் மோடி நினைவுகூர்ந்தார். அப்போது எடுக்கப்பட்ட முடிவுகளை அமல்படுத்தி வரும் நிலவரம் குறித்தும் இரு தலைவர்களும் விவாதித்தனர்.

மேலும் இருதரப்பு உறவை வலுப்படுத்த வேண்டியதின் அவசியம் குறித்தும் அவர் ஜின்பிங்கிடம் விளக்கினார்.

இந்தியா மற்றும் சீனா இடையேயான ஒட்டுமொத்த இரு தரப்பு உறவை மேலும் வலுப்படுத்துவதுடன், வர்த்தகம், முதலீடு துறைகளில் உறவை ஆழப்படுத்தும் சாத்தியக்கூறுகள் பற்றியும் இரு தலைவர்களும் ஆராய்ந்தனர்.

இரு தலைவர்களின் சந்திப்பு குறித்து இந்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரவீஷ்குமார் கூறும்போது, “இந்த சந்திப்பு நல்ல முறையில், முன்னோக்கிய பார்வையுடன் அமைந்தது” என்று குறிப்பிட்டார்.

இந்தியாவுக்கான சீன தூதர் லுவோ ஜோஹூய், “வூகன் முறைசாரா உச்சி மாநாட்டில் இரு தரப்பிலும் எட்டப்பட்ட முடிவுகளை நடைமுறைப்படுத்துவது குறித்தும், எதிர்கால இந்திய, சீன உறவு குறித்து திட்டமிடுவதிலும் இரு தலைவர்களும் கவனம் செலுத்தினர்” என குறிப்பிட்டார்.

பிரதமர் மோடி, சீன அதிபர் ஜின்பிங் முன்னிலையில் பிரம்மபுத்திரா நதிநீரை இந்தியாவுக்கு சீனா வழங்குதல் பற்றிய தகவல்களை பகிர்ந்து கொள்வது தொடர்பாக ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

சீனாவுக்கு இந்தியாவில் இருந்து பாசுமதி தவிர்த்த பிற அரிசி வகைகளை ஏற்றுமதி செய்வதற்கான நெறிமுறைகளை திருத்தம் செய்வதற்கான ஒரு ஒப்பந்தமும் கையெழுத்தானது.

சீன அதிபர் ஜின்பிங்குடனான சந்திப்பு பற்றி பிரதமர் மோடி டுவிட்டரில் ஒரு பதிவு வெளியிட்டார்.

அதில் அவர், “இந்த ஆண்டு ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டை நடத்துகிற சீன அதிபர் ஜின்பிங்கை சந்தித்து பேசினேன். இருதரப்பு மற்றும் உலக விஷயங்கள் குறித்து விரிவாக விவாதித்தோம். இந்திய-சீன உறவுக்கு எங்களது பேச்சு மேலும் வீரியம் சேர்க்கும்” என குறிப்பிட்டு உள்ளார்.