உலக செய்திகள்

அமெரிக்க ஜனாதிபதி டிரம்புடன் நாளை சந்திப்பு: வடகொரிய தலைவர் கிம் சிங்கப்பூர் சென்றார் + "||" + US President Trump met tomorrow: North Korean leader Kim went to Singapore

அமெரிக்க ஜனாதிபதி டிரம்புடன் நாளை சந்திப்பு: வடகொரிய தலைவர் கிம் சிங்கப்பூர் சென்றார்

அமெரிக்க ஜனாதிபதி டிரம்புடன் நாளை சந்திப்பு: வடகொரிய தலைவர் கிம் சிங்கப்பூர் சென்றார்
வட கொரியா தலைவர் கிம் ஜாங் அன் சிங்கப்பூர் சென்று அடைந்தார். அவரை இந்திய வம்சாவளி மந்திரி வரவேற்றார். நாளை நடைபெறுகிற உச்சி மாநாட்டில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்பை, கிம் ஜாங் அன் சந்தித்து பேசுகிறார்.
சிங்கப்பூர், 

உலக நாடுகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியிலும், பொருளாதார தடைகளுக்கு இடையேயும் அணு ஆயுத சோதனைகளிலும், கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனைகளிலும் வட கொரியா தீவிர ஆர்வம் காட்டி வந்தது. இது அந்த நாட்டுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே தீராப்பகையை ஏற்படுத்தியது.

அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 20-ந் தேதி பதவி ஏற்றது முதல், அவருக்கும் வட கொரியாவின் தலைவர் கிம் ஜாங் அன்னுக்கும் இடையே கடுமையான வார்த்தை யுத்தம் நடந்து வந்தது.

இந்த நிலையில்தான் சற்றும் எதிர்பாராத வகையில் தென்கொரியாவில் கடந்த பிப்ரவரி மாதம் நடந்த குளிர்கால ஒலிம்பிக் போட்டி, தென் கொரியாவுக்கும், வடகொரியாவுக்கும் இடையே இணக்கத்தை ஏற்படுத்தியது.

அதைத் தொடர்ந்து தென்கொரியாவின் முயற்சியால் வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன்னை உச்சி மாநாட்டில் நேருக்கு நேர் சந்தித்து பேச தயார் என டிரம்ப் முன் வந்தார். இது உலக அரங்கை அதிர வைத்தது.

பல அதிரடி திருப்பங்களுக்கும், மாற்றங்களுக்கும் பிறகு, ஒருவழியாக இவ்விரு தலைவர்கள் சந்தித்து பேசும் உச்சி மாநாடு நாளை (செவ்வாய்க்கிழமை) காலை உள்ளூர் நேரப்படி 9 மணிக்கு சிங்கப்பூர் சென்டோசா தீவில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடக்கிறது. உலக அளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள இந்த உச்சி மாநாட்டுக்கு சிறப்பான ஏற்பாடுகளை அமெரிக்கா, வடகொரியா, சிங்கப்பூர் ஆகிய 3 நாடுகளும் இணைந்து செய்து உள்ளன. இதற்காக அங்கு வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளன.

இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன் நேற்று உள்ளூர் நேரப்படி மதியம் 2.36 மணிக்கு சிங்கப்பூர் சாங்கி விமான நிலையத்தில் ‘ஏர் சீனா போயிங் 747’ விமானத்தில் சென்று இறங்கினார். 2 நாட்களுக்கு முன்பாகவே அவர் சிங்கப்பூர் சென்று அடைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

கிம் ஜாங் அன்னை விமான நிலையத்தில் இந்திய வம்சாவளி தமிழரான சிங்கப்பூர் வெளியுறவு மந்திரி விவியன் பாலகிருஷ்ணன் வரவேற்றார். 30 வாகனங்களுடன் கூடிய வாகன அணிவகுப்புடன் கிம் ஜாங் அன் செயின்ட் ரெஜிஸ் ஓட்டலுக்கு சென்றார்.

கிம் ஜாங் அன்னுக்கு தேவையான உணவுப்பொருட்கள், அவர் உபயோகத்துக்கான சொகுசு கார்கள் வடகொரியாவில் இருந்து சரக்கு விமானம் மூலம் சிங்கப்பூர் சென்று அடைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.டிரம்பும், கிம் ஜாங் அன்னும் நாளை உச்சி மாநாட்டில் சந்தித்து பேசுவது வரலாற்று நிகழ்வாக மாறி உள்ளது. இதுவரை எந்தவொரு அமெரிக்க ஜனாதிபதியும், வடகொரிய தலைவரும் நேருக்கு நேர் சந்தித்து பேசியது கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த உச்சி மாநாட்டில் சி.வி.ஐ.டி. என்று சொல்லப்படுகிற முழுமையான அணு ஆயுத கைவிடலுக்கு வட கொரியா தலைவர் கிம் ஜாங் அன் முன் வந்து ஒப்பந்தம் செய்து கொள்வார் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

மேலும், வட கொரியாவுக்கும், தென் கொரியாவுக்கும் இடையேயான போரை முறைப்படி முடித்து இரு நாடுகளும் சமரச ஒப்பந்தம் செய்து கொள்ளவும் இந்த உச்சி மாநாடு வழிவகை வகுக்கும் என்று கூறப்படுகிறது.

மொத்தத்தில் இந்த உச்சி மாநாடு, உலக அளவில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என்ற கருத்து உருவாகி உள்ளது.