சிங்கப்பூர் பிரதமர் லீ உடன் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் சந்திப்பு


சிங்கப்பூர் பிரதமர் லீ உடன் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் சந்திப்பு
x
தினத்தந்தி 11 Jun 2018 8:18 AM GMT (Updated: 11 Jun 2018 8:18 AM GMT)

சிங்கப்பூர் பிரதமர் லீ -ஐ அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் சந்தித்த்து பேசினார்.

சிங்கப்பூர்,

உலக நாடுகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியிலும், பொருளாதார தடைகளுக்கு இடையேயும் அணு ஆயுத சோதனைகளிலும், கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனைகளிலும் வட கொரியா தீவிர ஆர்வம் காட்டி வந்தது. இது அந்த நாட்டுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே தீராப்பகையை ஏற்படுத்தியது.
அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 20-ந் தேதி பதவி ஏற்றது முதல், அவருக்கும் வட கொரியாவின் தலைவர் கிம் ஜாங் அன்னுக்கும் இடையே கடுமையான வார்த்தை யுத்தம் நடந்து வந்தது.

இந்த நிலையில்தான் சற்றும் எதிர்பாராத வகையில் தென்கொரியாவில் கடந்த பிப்ரவரி மாதம் நடந்த குளிர்கால ஒலிம்பிக் போட்டி, தென் கொரியாவுக்கும், வடகொரியாவுக்கும் இடையே இணக்கத்தை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து தென்கொரியாவின் முயற்சியால் வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன்னை உச்சி மாநாட்டில் நேருக்கு நேர் சந்தித்து பேச தயார் என டிரம்ப் முன் வந்தார். இது உலக அரங்கை அதிர வைத்தது.

பல அதிரடி திருப்பங்களுக்கும், மாற்றங்களுக்கும் பிறகு, ஒருவழியாக இவ்விரு தலைவர்கள் சந்தித்து பேசும் உச்சி மாநாடு நாளை (செவ்வாய்க்கிழமை) காலை உள்ளூர் நேரப்படி 9 மணிக்கு சிங்கப்பூர் சென்டோசா தீவில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடக்கிறது.  இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் சிங்கப்பூர் சென்றுள்ளனர்.

இந்நிலையில், சிங்கப்பூர் அதிபரின் அதிகாரப்பூர்வ மாளிகையான இஸ்தானாவில் இன்று அமெரிக்க அதிபர் டிரம்புக்கு முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரதமர் லீ செய்ன் லூங் டிரம்பை வரவேற்று அழைத்துச் சென்றார். டிரம்புடன் அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி மைக் பாம்பியோ, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன், வெள்ளை மாளிகை ஊடகப்பிரிவு செயலாளர் சாரா மற்றும் அதிகாரிகள் சென்றனர். இதையடுத்து இரு நாட்டு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து லீ செய்ன் லூங், டிரம்ப் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் டிரம்ப் மற்றும் அவருடன் சென்ற குழுவினருக்கு பிரதமர் லீ மதிய விருந்து அளித்தார். 

இந்த விருந்தின் போது, சிங்கப்பூர் பிரதமரிடம் கனிவான வரவேற்புக்காக நன்றி தெரிவித்துக்கொண்ட டிரம்ப், நாளை நடைபெற உள்ள சந்திப்பில், சுமூகமான முடிவுகள் வெளியாகும் என நம்புவதாகவும் தெரிவித்ததாக செய்திகள் வெளிவந்துள்ளன.


Next Story