ஈராக்கில் வாக்குப்பெட்டி குடோன் தீ விபத்தில் சதி - பிரதமர் அல் அபாதி குற்றச்சாட்டு


ஈராக்கில் வாக்குப்பெட்டி குடோன் தீ விபத்தில் சதி - பிரதமர் அல் அபாதி குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 11 Jun 2018 11:00 PM GMT (Updated: 11 Jun 2018 6:59 PM GMT)

ஈராக்கில் வாக்குப்பெட்டி குடோன் தீ விபத்தில் சதி நடந்துள்ளதாக பிரதமர் அல் அபாதி குற்றச்சாட்டியுள்ளார்.

பாக்தாத்,

ஈராக் நாடாளுமன்றத்துக்கு கடந்த மாதம் 12-ந் தேதி தேர்தல் நடந்தது. இதில் பதிவான வாக்குகள் அனைத்தும் எலக்ட்ரானிக் கருவி மூலம் எண்ணப்பட்டது. எனினும் கையால் எண்ணி முடிவை அறிவிக்க வேண்டும் என கடந்த 6-ந் தேதி நாடாளுமன்றம் உத்தரவிட்டது. இதற்காக வாக்குப்பெட்டிகள் அனைத்தும் ஆங்காங்கே உள்ள குடோன்களில் சேகரித்து வைக்கப்பட்டு இருந்தன.

இதில் பாக்தாத்தில் உள்ள வர்த்தக அமைச்சக கட்டிடத்தில் இருந்த குடோனில் நேற்று முன்தினம் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. மொத்தமுள்ள 329 தொகுதிகளில், 71 தொகுதிகளில் பதிவான வாக்குகள் கொண்ட பெட்டிகள் இங்கு வைக்கப்பட்டு இருந்தன. இதில் கணிசமான வாக்குப்பெட்டிகள் தீயில் எரிந்து நாசமாயின. இது ஈராக் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்த விபத்தின் பின்னணியில் சதி இருப்பதாக ஈராக் பிரதமர் ஹைதர் அல் அபாதி குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து நேற்று அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘தேர்தல் குடோனை எரிப்பது என்பது, தேசம் மற்றும் அதன் ஜனநாயகத்துக்கு தீங்கு விளைவிக்க நடந்த சதி ஆகும். இது தொடர்பாக நாங்கள் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வதுடன், நாடு மற்றும் அதன் குடிமக்களின் பாதுகாப்புக்கு எதிரானவர்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்குவோம்’ என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த தேர்தலில் பிரதமரின் வெற்றி கூட்டணி 3-வது இடமே பிடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story