உலக செய்திகள்

மாணவர்கள் எளிதாக விசா பெறும் பட்டியலில் இருந்து இந்தியா நீக்கம் இங்கிலாந்து அரசு கெடுபிடி + "||" + Students can easily be removed from the list of Visa receivers

மாணவர்கள் எளிதாக விசா பெறும் பட்டியலில் இருந்து இந்தியா நீக்கம் இங்கிலாந்து அரசு கெடுபிடி

மாணவர்கள் எளிதாக விசா பெறும் பட்டியலில் இருந்து இந்தியா நீக்கம் இங்கிலாந்து அரசு கெடுபிடி
மாணவர்கள் எளிதாக விசா பெறும் பட்டியலில் இருந்து இந்தியாவை இங்கிலாந்து அரசு நீக்கியது. இதனால் இங்கிலாந்து சென்று படிக்க விரும்பும் இந்திய மாணவர்கள் கடுமையான விதிமுறைகளை சந்திக்கும் நிலை உருவாகி உள்ளது.

லண்டன்,

இங்கிலாந்து நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களில் சேர்ந்து படிப்பதற்காக ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கான இந்திய மாணவர்கள் விண்ணப்பிக்கிறார்கள். இவர்கள் விசா பெறுவதற்காக விண்ணப்பிக்கும் விதிமுறைகள் இதுவரை சற்று எளிமையாக இருந்தது.

இந்த நிலையில் அடுத்த மாதம் (ஜூலை) 6–ந் தேதி முதல் இங்கிலாந்து பல்கலைக்கழகங்களில் சேர்ந்து படிக்க விரும்பும் வெளிநாட்டு மாணவர்களுக்கு புதிய 4 அடுக்கு விசா விதிமுறைகளை அந்நாட்டு அரசாங்கம் அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் வெளிநாட்டு மாணவர்கள் எளிதாக விசா பெறுவதற்கு விண்ணப்பிக்கும் நிலை ஏற்படுத்தப்பட்டு இருக்கிறது.

4 அடுக்கு விசா தொடர்பான குடியேற்ற கொள்கை இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் தாக்கல் செய்யப்பட்டது. அது தொடர்பான பட்டியலில் அமெரிக்கா, கனடா, நியூசிலாந்து, சீனா, பஹ்ரைன், செர்பியா உள்ளிட்ட 25 நாடுகள் இடம் பிடித்து உள்ளன. இந்த நாடுகளின் மாணவர்கள் விசாவிற்கு விண்ணப்பம் செய்வதில் மிகவும் தாராளம் காட்டப்பட்டு உள்ளது.

அதே நேரம் ஏற்கனவே இந்த பட்டியலில் இடம் பெற்றிருந்த இந்தியா திடீரென நீக்கப்பட்டு உள்ளது. இதனால் விசா பெற விண்ணப்பிக்க, இந்திய மாணவர்கள் பல்வேறு கடுமையான சோதனைகளை சந்திக்கவேண்டி உள்ளது. மேலும் இதற்காக அவர்கள் ஏராளமான ஆவணங்களை தாக்கல் செய்யும் நிலைக்கும் தள்ளப்பட்டு இருக்கின்றனர். இது இந்தியா மாணவர்களையும், இந்திய அரசையும் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.

இதுபற்றி இந்திய வம்சாவளி தொழில் அதிபரும், இங்கிலாந்துக்கான சர்வதேச மாணவர்கள் விவகார கவுன்சில் தலைவருமான கரண் பிலிமோரியா கூறுகையில், ‘‘இங்கிலாந்தின் இந்த நடவடிக்கை இந்தியாவை அவமானப்படுத்துவதாக உள்ளது. இங்கிலாந்து அரசாங்கம் இந்திய மாணவர்களுக்கு பெரும் அநீதியை இழைத்தும் உள்ளது’’ என்றார்.

இங்கிலாந்துக்கான இந்திய தூதர் ஒய்.கே.சின்கா கடந்த வாரம் இங்கிலாந்து பல்கலைக்கழகங்களுக்கான மந்திரி சாம் ஜியிமாவை சந்தித்து இப்பிரச்சினையை எழுப்பிய நிலையில் அந்நாட்டு அரசு இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்து உள்ளது.