4 ஆண்டுகளுக்கு பின் துப்பு துலங்கிய இந்திய மாணவர் கொலை வழக்கு: அமெரிக்கர் குற்றவாளி என தீர்ப்பு


4 ஆண்டுகளுக்கு பின் துப்பு துலங்கிய இந்திய மாணவர் கொலை வழக்கு: அமெரிக்கர் குற்றவாளி என தீர்ப்பு
x
தினத்தந்தி 18 Jun 2018 2:27 AM GMT (Updated: 18 Jun 2018 2:27 AM GMT)

4 ஆண்டுகளுக்கு பின் துப்பு துலங்கிய இந்திய மாணவர் கொலை வழக்கில் அமெரிக்கர் குற்றவாளி என தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.


வாஷிங்டன், 

அமெரிக்காவில் தெற்கு இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்தில் படித்து வந்தவர் பிரவிண் வர்க்கீஸ். இந்திய வம்சாவளி மாணவர். இவர் கடந்த 2014–ம் ஆண்டு திடீரென மாயம் ஆனார். 5 நாட்களுக்கு பின்னர் அவர் விபத்தில் மரணம் அடைந்து விட்டதாக கார்பன்டேல் பகுதி போலீசார் அறிவித்தனர்.

19 வயதான பிரவிண் மரணம், விபத்தினால் நிகழ்ந்தது அல்ல என்று அவரது குடும்பத்தினர் கருதினர். அவர்கள் தனிப்பட்ட முறையில் டாக்டர்களை கொண்டு நடத்திய பிரேத பரிசோதனையின் முடிவு, கார்பன்டேல் பகுதி போலீசார் ஏற்பாட்டில் நடந்த பிரேத பரிசோதனை அறிக்கையில் இருந்து முரண்பட்டது.
இதையடுத்து வர்க்கீஸ் குடும்பத்தினர், கார்பன்டேல் பகுதி போலீஸ் மீது கோர்ட்டில் வழக்கு தொடுத்தனர். அதன்பின்னர் இந்த வழக்கில் 19 வயதான கயேஜ் பெதுனே என்ற அமெரிக்கர் சிக்கினார்.

இல்லினாய்சை சேர்ந்த இவர், பிரவிண் வர்க்கீசை சம்பவத்தன்று (2014–ம் ஆண்டு பிப்ரவரி 12–ந் தேதி) இரவு ஒரு வாகனத்தில் அழைத்து சென்று உள்ளார். அப்போது கொகைன் போதைப்பொருள் வாங்க பிரவிண் வர்க்கீஸ் விரும்பி உள்ளார். அது தொடர்பாக இருவருக்கும் இடையே பணத்தகராறு ஏற்பட்டு உள்ளது. அதில் பிரவீண் வர்க்கீசை பெதுனே சரமாரியாக தாக்கி உள்ளார். அதில் அவர் உயிரிழந்தார்.

இப்போது பெதுனே மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு உள்ளதால் அவர் குற்றவாளி என கோர்ட்டு அறிவித்தது. இந்த வழக்கில் அவருக்கு 20 முதல் 60 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம். 4 ஆண்டுகளுக்கு பிறகு தங்களது மகன்சாவில் நீதி கிடைத்து உள்ளதில் பிரவிண் வர்க்கீசின் தாயார் லவ்லி வர்க்கீஸ் நிம்மதி அடைந்து உள்ளார்.

Next Story