விசா விவகாரம்: இந்திய மாணவர்களுக்கு விதிமுறைகளை கடுமையாக்கியது ஏன்?, இங்கிலாந்து மந்திரி விளக்கம்


விசா விவகாரம்: இந்திய மாணவர்களுக்கு விதிமுறைகளை கடுமையாக்கியது ஏன்?, இங்கிலாந்து மந்திரி விளக்கம்
x
தினத்தந்தி 19 Jun 2018 10:30 PM GMT (Updated: 19 Jun 2018 7:51 PM GMT)

விசா விவகாரத்தில் இந்திய மாணவர்களுக்கு விதிமுறைகளை கடுமையாக்கியது ஏன்? என இங்கிலாந்து வர்த்தக மந்திரி லியாம் பாக்ஸ் விளக்கம் அளித்துள்ளார்.

லண்டன், 

இங்கிலாந்து அரசு அண்மையில் தங்கள் நாட்டின் பல்கலைக்கழகங்களில் படிக்க வரும் வெளிநாட்டு மாணவர்கள் விசா பெறுவதற்கான புதிய விதிமுறைகளை அறிவித்தது. 25 நாடுகளின் மாணவர்கள் எளிதாக விசா பெறும் பட்டியலில் இடம்பெற்றனர். இதில், ஏற்கனவே இடம்பெற்றிருந்த இந்தியா திடீரென நீக்கப்பட்டது. இதற்கான காரணம் தற்போது வெளியாகி உள்ளது.

இது தொடர்பாக இங்கிலாந்து வர்த்தக மந்திரி லியாம் பாக்ஸ் கூறுகையில், “நாங்கள் இந்தியாவுடன் தொடர்ந்து பேசவேண்டிய விஷயங்களில் இதுவும் ஒன்று. ஏனென்றால் இந்தியா எப்போதுமே மாணவர்களுக்கு எளிதில் விசா பெறுவதைத்தான் கோரி வருகிறது. அதே நேரம் உரிய காலம் முடிந்த நிலையிலும் இங்கிலாந்தில் தங்கியுள்ள இந்தியர்கள் தொடர்பான பிரச்சினைக்கு தீர்வுகாண வேண்டும். இதற்கு தீர்வு காணாமல் விட்டு விட முடியாது” என்றார்.

தங்களது நாடுகளில் சட்டவிரோதமாக தங்கியுள்ளவர்களை வெளியேற்றுவது தொடர்பாக இந்தியாவுக்கும், இங்கிலாந்துக்கும் இடையே கடந்த ஏப்ரல் மாதம் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தாக இருந்தது. இதில் சில சிக்கல்கள் இருந்ததால் கடைசி நேரத்தில் இந்தியா கையெழுத்திடவில்லை. இதன் காரணமாகவே இந்திய மாணவர்கள் எளிதாக விசா பெறும் பட்டியலில் நீக்கப்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது.

Next Story