இந்தோனேசியாவில் மத குருவுக்கு மரண தண்டனை: பயங்கரவாத வழக்கில் பரபரப்பு தீர்ப்பு


இந்தோனேசியாவில் மத குருவுக்கு மரண தண்டனை: பயங்கரவாத வழக்கில் பரபரப்பு தீர்ப்பு
x
தினத்தந்தி 23 Jun 2018 12:00 AM GMT (Updated: 22 Jun 2018 6:17 PM GMT)

பயங்கரவாத வழக்கில் தொடர்புடைய மத குருவுக்கு மரண தண்டனை விதித்து ஜகார்த்தா நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியது.

ஜகார்த்தா, 

இந்தோனேசியாவின் தலைநகர் ஜகார்த்தா. அங்கு 2016-ம் ஆண்டு, ஐ.எஸ். பயங்கரவாதிகள் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தினர். அந்த நாட்டில் முதன்முதலாக நடந்த ஐ.எஸ். பயங்கரவாத தாக்குதல் இதுதான்.

தற்கொலைப்படை பயங்கரவாதிகள் 4 பேர் துப்பாக்கியால் சுட்டும், குண்டுகளை வெடித்தும் நடத்திய அந்த தாக்குதலில் 4 அப்பாவி மக்கள் பலியாகினர். தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் 4 பேரும் உயிரிழந்தனர்.

இந்த தாக்குதலின் பின்னணியில் மூளையாக இருந்து செயல்படுத்தியதாக அமன் அபுர்ரகுமான் (வயது 46) என்ற மத குரு மீது குற்றச்சாட்டு எழுந்தது. இவர் 2010-ம் ஆண்டு முதல் சிறையில் இருந்தாலும், சிறைக்குள் இருந்துகொண்டு இந்த தாக்குதலுக்கு சதி செய்தார் என்று கூறப்பட்டது.

இது தொடர்பான வழக்கை ஜகார்த்தாவில் உள்ள கோர்ட்டு விசாரித்தது. விசாரணையின்போது, அமன் அபுர்ரகுமான், தன்மீது சுமத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் சதி குற்றச்சாட்டை மறுத்தார். ஆனால் அவர் மீதான குற்றச்சாட்டு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டு உள்ளதாக கருதிய நீதிபதி அகமது ஜைனி அவருக்கு மரண தண்டனை விதித்து நேற்று பரபரப்பு தீர்ப்பு வழங்கினார்.

Next Story