துருக்கி அதிபர் தேர்தல்: தாயீப் எர்டோகன் வெற்றி பெற்றுள்ளதாக தகவல்


துருக்கி அதிபர் தேர்தல்: தாயீப் எர்டோகன் வெற்றி பெற்றுள்ளதாக தகவல்
x
தினத்தந்தி 25 Jun 2018 2:21 AM GMT (Updated: 25 Jun 2018 2:30 AM GMT)

துருக்கி அதிபர் தேர்தலில் இரண்டாவது முறையாக தாயீப் எர்டோகன் வெற்றி பெற்றுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. #TayyipErdogan

இஸ்தான்புல்,

துருக்கி நாட்டில் நேற்று அதிபர் தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு விறுவிறுப்பான முறையில் நடைபெற்றது. அதிபர் தேர்தலில் மொத்தம் 6 பேர் களத்தில் உள்ளனர்.

ஆனால் எர்டோகனுக்கும், குடியரசு மக்கள் கட்சியின் மைய இடதுசாரி வேட்பாளரான முஹரம் இன்சுக்கும் இடையேதான் நீயா, நானா என்கிற வகையில் கடும் போட்டி நிலவி வந்தது. இருவரும் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.  இந்நிலையில் தேர்தல் முடிந்து ஓட்டு எண்ணிக்கை உடனே தொடங்கப்பட்ட நிலையில், தாயீப் எர்டோகன் வெற்றி பெற்று இரண்டாவது முறையாக அதிபராக பதவியேற்பார் என்ற தகவல் வெளிவந்துள்ளது. 

இது குறித்து தேர்தல் வாரிய தலைவர் சாடி க்வென் கூறுகையில், ”97.7 சதவீத ஓட்டுகள் எண்ணப்பட்டுள்ளன. இதுவரை வாக்கு எண்ணிக்கையில் சமநிலை ஏற்கப்படவில்லை. தேர்தல் முடிவானது எந்த ஒரு விளைவையும் ஏற்படுத்தாது” எனக் கூறியுள்ளார். 

இந்நிலையில் தேர்தல் முடிவுகள் எர்டொகனுக்கு சாதகமாய் அமைந்துள்ளதாக அதிபரின் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் தேர்தல் முடிவுகள் இன்னும் வெளிவராத நிலையில் எர்டோகன் சி.என்.என் செய்தி நிறுவனத்திடம் பேசுகையில், ”நான் மீண்டும் நம் நாட்டு மக்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். ஜனநாயகத்தை நிலை நிறுத்த எனக்கு மற்றொரு வாய்ப்பு கிடைத்துள்ளது. இதை ஏற்றுக்கொண்டு ஜனநாயகத்தை சிறப்பான முறையில் வழி நடத்துவேன்” எனக் கூறியுள்ளார். 

இது குறித்து குடியரசு மக்கள் கட்சி தரப்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், 50 சதவீத வாக்குகளே எண்ணப்பட்டுள்ள நிலையில், தேர்தல் முடிவுகள் குறித்து உறுதியாக ஏதும் கூற இயலாது எனக் கூறியுள்ளது.

இதற்கிடையில் ஓட்டு எண்ணிக்கை உடனே தொடங்கினாலும் அதிகாரப்பூர்வமாக முடிவுகள் வெளிவர சில தினங்கள் ஆகலாம் என அங்கு இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

Next Story