வெள்ளை மாளிகை முன்பு மாபெரும் ஆர்ப்பாட்டம் லட்சக்கணக்கானோர் திரண்டனர்


வெள்ளை மாளிகை முன்பு மாபெரும் ஆர்ப்பாட்டம் லட்சக்கணக்கானோர் திரண்டனர்
x
தினத்தந்தி 1 July 2018 11:15 PM GMT (Updated: 1 July 2018 9:41 PM GMT)

டிரம்பின் குடியேற்ற கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து வெள்ளை மாளிகை முன்பு மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

வாஷிங்டன்,

அமெரிக்காவினுள் சட்டவிரோதமாக நுழைகிறவர்கள் குழந்தைகளுடன் வந்திருந்தால், அந்த குழந்தைகளை பெற்றோரிடம் இருந்து பிரித்தெடுத்து, அவர்களுக்கான தனி காவல் மையத்தில் அடைக்கிற கொள்கையை ஜனாதிபதி டிரம்ப் நிர்வாகம் அமல்படுத்தியது.

இதற்கு மனைவி மெலனியா டிரம்ப், மகள் இவான்கா டிரம்ப் ஆகியோரும்கூட, ஆட்சேபம் தெரிவித்ததால் டிரம்ப் தனது கொள்கையை திரும்பப்பெற்றார்.

அதன்படி குழந்தைகளை அவர்களின் பெற்றோரோடு சேர்க்கும் உத்தரவில் டிரம்ப், கையெழுத்திட்டபோதும், அங்கு அந்த நடைமுறை இன்னும் அமலுக்கு வரவில்லை.

இந்த நிலையில் டிரம்பின் குடியேற்ற கொள்கையை எதிர்த்தும், தனிகாவல் மையங்களில் அடைத்துவைக்கப்பட்டிருக்கும் குழந்தைகளை அவர்களின் பெற்றோரோடு சேர்க்க வலியுறுத்தியும் அமெரிக்காவில் போராட்டங்கள் வலுத்துவருகின்றன.

தலைநகர் வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகைக்கு லட்சக்கணக்கான மக்கள் பேரணியாக சென்று அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது டிரம்பின் குடியேற்ற கொள்கையை கண்டித்து கண்டன கோ‌ஷங்களை எழுப்பினர்.

டெக்சாஸ் மாகாணத்தின் எல் பாசோ நகரில் இருந்து மெக்சிகோவின் சியுடெட் ஜூரெஸ் நகருக்கு செல்லக்கூடிய மேம்பாலத்தில் போராட்டக்காரர்கள் ஆயிரக்கணக்கில் திரண்டு தடுப்புகளை ஏற்படுத்தி போக்குவரத்தை நிறுத்தினர்.

சிகாகோ நகரில் ஆயிரக்கணக்கான மக்கள் பேரணியாக சென்று கூட்டாட்சி குடியேற்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதே போன்று அமெரிக்காவின் பல்வேறு நகரங்களிலும் மக்கள் வீதியில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அமெரிக்காவில் 2010–ம் ஆண்டுக்கு பிறகு குடியேற்ற பிரச்சினை தொடர்பாக நடக்கக்கூடிய மிகப்பெரிய அமைதி வழி போராட்டமாக இது பார்க்கப்படுகிறது.


Next Story