இந்தியாவுக்கு வர விரும்பும் பாகிஸ்தான் பைக் பாவை!


இந்தியாவுக்கு வர விரும்பும் பாகிஸ்தான் பைக் பாவை!
x
தினத்தந்தி 7 July 2018 8:04 AM GMT (Updated: 7 July 2018 8:04 AM GMT)

மோட்டார் சைக்கிளில் சீறும் ஜெனித் இர்பானை பாகிஸ்தானில் பிரமிப்பாகப் பார்க்கிறார்கள்.

 23 வயதாகும் ஜெனித் இர்பானை பற்றி ஒரு திரைப்படமே வெளியாகி விட்டது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்!

பாகிஸ்தானில் ஆபத்தான பகுதியாகக் கருதப்படும் வடக்குப் பிராந்தியத்தில் தனியாகப் பயணித்த சாகச மோட்டார்சைக்கிள் வீராங்கனை இவர்.

ஜெனித்தின் ‘நறுக்’ ‘சுருக்’ பேட்டி...

உங்களைப் பற்றி ஒரு திரைப்படம் வெளியாகி இருப்பது பற்றி?

ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. இப்படம் நல்ல வரவேற்புப் பெற்றிருக்கிறது, விமர்சகர்களும், ‘இந்தப் படம் பாகிஸ்தான் சினிமாவையே மாற்றி விட்டது’ என்று பாராட்டித் தள்ளியிருக்கிறார்கள்.

நீங்கள் எப்படி மோட்டார்சைக்கிள் பயணத்தைத் தொடங்கினீர்கள்?

எனக்குக் கடந்த 2013-ம் ஆண்டு 18 வயது ஆனது. அப்போது நான், மறைந்த எங்கப்பாவின் ஆசையை நிறைவேற்றத் தீர்மானித்தேன். உலகெங்கும் ஒரு மோட்டார் சைக்கிளில் பயணிப்பதுதான் அவரது ஆசை. நான் இதுவரை பாகிஸ்தானின் கில்கிட் பல்டிஸ்டான், பஞ்சாப், கைபர் பக்துன்கவா மாநிலங்களில் 200 நகரங்களைக் கடந்து விட்டேன். மொத்தம் 20 ஆயிரம் கிலோமீட்டர் தூரம் பயணித்திருக்கிறேன்.

மோட்டார் சைக்கிளில் நெடுஞ்சாலைகளில் சீறும்போது, விபத்தில் சிக்கிக் கொள்ளக்கூடும் என்ற அச்சமில்லையா?

மரணம் நேர வேண்டும் என்றிருந்தால் அது நாம் நம் வீட்டுக்குள் இருக்கும் போதுகூட நேரலாம். அதை நம்மால் தவிர்க்க முடியாது. விபத்து, மரணம் போன்ற அச்சங்களால், மோட்டார்சைக்கிள் ஓட்டும் எனது கனவை நான் கலைத்துவிட முடியாது.

உங்கள் வாழ்க்கையில் இரு முக்கியமான நபர்கள்?

என் அம்மாவும் அண்ணனும். பெண்களுக்கு கல்வியும், அவர்கள் விருப்பம்போல் செயல்பட அனுமதிப்பதும் முக்கியம் எனக் கருதுபவர் என் அம்மா. எனக்கு மோட்டார் சைக்கிள் ஓட்டக் கற்றுக்கொடுத்து இவ்விஷயத்தில் ஆதரவாக இருப்பவர் என் அண்ணன்.

ஒரு நீண்டதூரப் பயணத்துக்கு நீங்கள் எப்படித் தயாராவீர்கள்?

நாம் நினைத்தவுடன் பைக்கை எடுத்துக் கொண்டு பறந்துவிட முடியாது. மோட்டார்சைக்கிளை முழுமையாகப் பரிசோதித்து, தயார் செய்வதற்கே ஒரு வாரம் ஆகும். தேவையான பொருட்களை ‘பேக்’ செய்வதற்கு ஒரு நாள் ஆகும். திட்டமிடல், பிற விஷயங்கள் என்று ஒரு பயணத்துக்குத் தயாராக ஒரு மாதம் தேவை.

நீங்கள் மோட்டார்சைக்கிளில் செல்வதை பாகிஸ்தானிய ஆண்கள் எப்படி எடுத்துக் கொள்கிறார்கள்?

மலைப்பகுதிகளைப் பொறுத்தவரை, அங்குள்ள ஆண்கள் ஒரு பெண் தங்கள் பள்ளத்தாக்குகள் வழியே மோட்டார்சைக்கிளில் பயணிப்பதை பெருமையாகக் கருதுகிறார்கள். நகர்ப்புறப் பகுதிகளில் ஆண்கள் வரவேற்பு, புறக்கணிப்பு இரண்டையும் வெளிப்படுத்துகிறார்கள். பல சமயங்களில் அவர்கள் தங்கள் ‘ஈகோ’ அடிபடுவதாக உணர்ந்து என்னை முந்திச் செல்ல முயல்வார்கள். பொதுவாக, ஒரு பெண் பைக் ஓட்டுவதை பாகிஸ்தானிய ஆண்கள் அதிகம் பார்த்ததில்லை.

இன்னும் நீங்கள் செல்ல விரும்பும் இடங்கள்?

ஒருநாள் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே உறவு சீரடையும் என்று நம்பு கிறேன். அப்போது நான் உங்கள் கேரளாவுக்கு மோட்டார்சைக்கிள் ஓட்டி வருவேன். பூமியில் ஒரு சொர்க்கம் என்று வர்ணிக்கப்படும் காஷ்மீருக்கும் செல்ல ஆசை!

வாருங்கள், வரவேற்கிறோம்! 

Next Story