ஜப்பானில் பலத்த மழை: 38 பேர் பலி, 16 லட்சம் பேர் வெளியேற உத்தரவு


ஜப்பானில் பலத்த மழை: 38 பேர் பலி, 16 லட்சம் பேர் வெளியேற உத்தரவு
x
தினத்தந்தி 7 July 2018 10:30 PM GMT (Updated: 7 July 2018 6:19 PM GMT)

ஜப்பானில் நாட்டில் பல இடங்களில் பெய்த பலத்த மழையினால் 38 பேர் பலியாகினர். மேலும் 16 லட்சம் பேர் தங்களது வீடுகளில் இருந்து வெளியேறுமாறு அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர்.

டோக்கியோ, 

ஜப்பான் நாட்டின் மேற்கு பகுதியில், குறிப்பாக ஹோன்சு தீவு, ஷிகோகு தீவு உள்ளிட்ட பல இடங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அங்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. சாலைகளில் மழை நீர், வெள்ளமென பெருக்கெடுத்து ஓடுகிறது. பல இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டு உள்ளன. இதன்காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை அங்கெல்லாம் முடங்கி உள்ளது.

இதற்கு மத்தியில், 4 மாகாணங்களில் வரலாறு காணாத வகையில் மழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து உள்ளது.

டோக்கியோ நகரில் இருந்து 600 கி.மீ. தொலைவில் உள்ள மோட்டோயோமா நகரத்தில் 24 மணி நேரத்தில் 583 மி.மீ. (23 அங்குலம்) மழை பெய்து உள்ளது.

மழை, வெள்ளம் தொடர்பான சம்பவங்களில் இதுவரை 38 பேர் உயிரிழந்து உள்ளனர். இவர்களில் பலர் ஹிரோஷிமா மாகாணத்தை சேர்ந்தவர்கள் ஆவார்கள். 50 பேரை காணவில்லை

தாழ்வான பகுதியில் வசித்து வருகிற 16 லட்சம் பேர் தங்களது வீடுகளில் இருந்து வெளியேறுமாறு அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர்.

வெள்ளத்தில் சிக்கி உள்ளவர்களை மீட்கும் பணியில் 48 ஆயிரம் போலீசார், தீயணைப்பு படை வீரர்கள், பாதுகாப்பு படை வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டு உள்ளதாக மந்திரிசபை செயலாளர் யோசிஹிடே சுகா தெரிவித்தார்.

மிட்சுபிஷி மோட்டார் வாகன நிறுவனம், தனது ஆலைகளில் ஒன்றில் உற்பத்தியை நிறுத்தி வைத்து உள்ளது.

Next Story