ஈரான் நாட்டில் 8 பயங்கரவாதிகளுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றம்


ஈரான் நாட்டில் 8 பயங்கரவாதிகளுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றம்
x
தினத்தந்தி 7 July 2018 11:30 PM GMT (Updated: 7 July 2018 7:23 PM GMT)

ஈரானில் துப்பாக்கியால் சுட்டும், குண்டுகளை வெடித்தும் பயங்கரவாத தாக்குதல்கள் நடத்தி 18 பேரை கொன்று குவித்த வழக்கில் 8 பயங்கரவாதிகளுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.

டெக்ரான், 

ஈரான் நாட்டில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 7-ந் தேதி, தலைநகர் டெக்ரானில் உள்ள நாடாளுமன்ற கட்டிடத்திலும், அந்த நாட்டின் தலைவராக திகழ்ந்த அயத்துல்லா கொமேனி நினைவிடத்திலும் பயங்கரவாதிகள் ஒரே நேரத்தில் துப்பாக்கியால் சுட்டும், குண்டுகளை வெடித்தும் கொடூர தாக்குதல்கள் நடத்தினர்.இந்த தாக்குதல்களில் ஒன்றும் அறியாத அப்பாவி மக்கள் 18 பேர் கொல்லப்பட்டனர். 50-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதல்கள் ஈரான் நாட்டையே உலுக்கியது.

இந்த தாக்குதலின்போது அங்கு விரைந்து சென்று, சம்பவ இடத்தை சுற்றி வளைத்த துணை ராணுவ படையினர், தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் 5 பேரை சுட்டுக்கொன்றனர்.

இந்த பயங்கரவாத தாக்குதல்களை நடத்தியது ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் ஆவர். ஷியா முஸ்லிம் மக்கள் பெரும்பான்மையாக உள்ள ஈரானில், சன்னி முஸ்லிம் பிரிவை சேர்ந்த ஐ.எஸ். அமைப்பினர் இந்த தாக்குதல்களை நடத்தியது அபூர்வ நிகழ்வு ஆகும்.

இது தொடர்பான வழக்கில் 8 பயங்கரவாதிகள் மீதான விசாரணை முடிந்தது. அவர்கள், சுலைமான் முசாபரி, இஸ்மாயில் சுபி, ரகுமான் பெரோஸ், மஜீத் மொர்டேசாய், சிராஸ் அஜிசி, அயூப் இஸ்மாயிலி, கொஸ்ரோ ரமேஜானி, உஸ்மான் பெரோஸ் ஆவார்கள்.

அவர்கள் மீதான பயங்கரவாத குற்றச்சாட்டு, கோர்ட்டில் நிரூபணமானது. இதையடுத்து அவர்களுக்கு மரண தண்டனை (தூக்கு தண்டனை) விதித்து விசாரணை நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.

இந்த நிலையில் அந்த 8 பேருக்கும் ஒரே நேரத்தில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டு விட்டதாக ஈரான் நீதித்துறை செய்தி நிறுவனம் மிஜான் நேற்று கூறியது. அதே நேரத்தில் 8 பேரும் எங்கு, எப்போது தூக்கில் போடப்பட்டனர் என்பது குறித்த தகவல் வெளியிடப்படவில்லை.

இந்த சம்பவங்கள் தொடர்பாக மேலும் 10-க்கும் மேற்பட்டோர் மீது கோர்ட்டில் விசாரணை நடைபெற்று வருகிறது.

உலகிலேயே மரண தண்டனையை அதிகளவில் விதித்து, நிறைவேற்றுகிற நாடுகளில் ஒன்றாக ஈரான் திகழ்கிறது. ஆனால் மொத்தமாக ஒரே நேரத்தில் 8 பேரை தூக்கில் போட்டு இருப்பது அபூர்வ நிகழ்வு ஆகும். கடைசியாக 2007-ம் ஆண்டு, ஆகஸ்டு மாதம் கற்பழிப்பு வழக்கு ஒன்றில் தண்டிக்கப்பட்ட 7 பேர் தூக்கில் போடப்பட்டனர் என்பது நினைவுகூரத்தக்கது.

Next Story