தமிழர்களின் பிரச்சனையை பேசினாலே விடுதலைப் புலிகள் ஆதரவாளர்களாக பார்க்கிறார்கள் - விஜயகலா குற்றச்சாட்டு


தமிழர்களின் பிரச்சனையை பேசினாலே விடுதலைப் புலிகள் ஆதரவாளர்களாக பார்க்கிறார்கள் - விஜயகலா குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 8 July 2018 1:38 PM GMT (Updated: 8 July 2018 1:38 PM GMT)

தமிழர்களின் பிரச்சனையை பேசினாலே விடுதலைப் புலிகள் ஆதரவாளர்களாக பார்க்கிறார்கள் என விஜயகலா குற்றம் சாட்டியுள்ளார்.


கொழும்பு,

  
இலங்கையில் பிரதமர் ரனில் விக்ரமசிங்கே தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சியை சேர்ந்தவரும், குழந்தைகள் நலத்துறை இணை மந்திரியாக இருந்தவருமான விஜயகலா மகேஸ்வரன் (வயது 45), வடக்கு மாகாணத்தை சேர்ந்தவர். இலங்கையின் ஒரே தமிழ் பெண் மந்திரியான இவர் கடந்த 2–ந் தேதி யாழ்ப்பாணத்தில் நடந்த பொதுக்கூட்டம் பேசுகையில்,

 பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் பாதுகாப்பு இல்லை. ‘வடக்கு மாகாணத்தில் தற்போது அதிகரித்து வரும் குற்ற சம்பவங்களை பார்க்கும் போது, விடுதலைப்புலிகள் இயக்கம் மீண்டும் உருவாக வேண்டும் என்பதே நமது விருப்பம்’  நாம் வாழ விரும்பினால், சுதந்திரமாக நடமாட வேண்டும். நம்முடைய குழந்தைகள் சுதந்திராக பள்ளிக்குச்சென்று, உயிருடன் மீண்டும் வீட்டுக்கு திரும்ப வேண்டும். ஆனால், வடக்கு மாகாணத்தில் சட்டம் ஒழுங்கு மிகவும் கெட்டுவிட்டது என்று பேசினார். விஜயகலாவின் இந்த கருத்துக்கு சிங்களர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பு கிளம்பியது. 

அரசியல் சட்டத்துக்கு எதிராக பேசிய அவர் பதவி விலக வேண்டும் என நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன.  பேச்சு அரசியல் சட்டத்துக்கு விரோதமானது, அவர் மீது விசாரணை நடத்த வேண்டும் என்று  வலியுறுத்தின. எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில், விஜயகலாவின் கருத்துகள் அரசியல் சாசனத்துக்கு எதிரானதா? என முடிவு செய்யுமாறு அட்டார்னி ஜெனரலை சபாநாயகர் அறிவுறுத்தியுள்ளார். ஆளும் கட்சியில் உள்ள எம்.பி.க்களும் தடை செய்யப்பட்ட ஒரு அமைப்புக்கு ஆதரவாகப் பேசிய விஜயகலாவை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என வலியுறுத்தினர். விஜயகலாவுக்கு எதிராக அவரது சொந்த கட்சியிலும் எதிர்ப்பு வலுத்ததால், இது குறித்து விசாரணை நடத்த ரனில் விக்ரமசிங்கே கேட்டுக்கொண்டுள்ளார். இதைத்தொடர்ந்து மந்திரி விஜயகலா தனது பதவியை ராஜினாமா செய்தார். அட்டார்னி ஜெனரல் நடத்தும் விசாரணைக்கு வசதியாக இந்த முடிவை எடுத்திருப்பதாக குறிப்பிட்டார்.

இந்நிலையில் தமிழர்களின் பிரச்சனையை பேசினாலே விடுதலைப் புலிகள் ஆதரவாளர்களாக பார்க்கிறார்கள் என விஜயகலா குற்றம் சாட்டியுள்ளார். வடக்கு பகுதியில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய விஜயகலா மகேஸ்வரன், “வடக்கில் தமிழர்களின் பிரச்சனையை நீங்கள் பேசும் போது, தெற்கில் உள்ளவர்கள் உங்களை விடுதலைப் புலிகளாக பார்க்கிறார்கள். என்னுடைய முயற்சிக்கு எதிர்ப்புக்கள் எழுந்தாலும், மக்களுக்கு நீதி கிடைக்க நான் போராடுவேன். மக்களுக்காக நான் என்னுடைய பதவியை ராஜினாமா செய்தேன்,” என கூறியுள்ளார். 


Next Story