பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் மருமகன் கைது


பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் மருமகன் கைது
x
தினத்தந்தி 9 July 2018 5:00 AM GMT (Updated: 9 July 2018 5:00 AM GMT)

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் மருமகன் சப்தார் கைது செய்யப்பட்டு உள்ளார். #NawazSharif

இஸ்லாமாபாத்,

பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சியின் தலைவர் மற்றும் முன்னாள் பிரதமராக இருந்தவர் நவாஸ் ஷெரீப்.  இவரது மருமகனான ராணுவ கேப்டன் (ஓய்வு) சப்தார் ராவல் பிண்டி நகரில் உள்ள பாப்ரா பஜாரில் வைத்து கைது செய்யப்பட்டார்.

அவரை கைது செய்வதற்கு முன் அக்கட்சியின் ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.  சப்தாரின் பெயர் கருப்பு பட்டியலில் வைக்கப்பட்டு உள்ளது.  இதனால் அவர் நாட்டை விட்டு வெளியேற முடியாது.

இங்கிலாந்தின் லண்டன் நகரில் பிளாட்டுகள் வாங்கியதில் செய்த ஊழல் குற்றச்சாட்டுகளுக்காக நவாஸ் ஷெரீப்பிற்கு 10 வருட சிறை தண்டனை வழங்கி கடந்த வெள்ளி கிழமை தீர்ப்பு வழங்கப்பட்டது.

நவாஸ் ஷெரீப்பின் மகள் மற்றும் அரசியல் வாரிசான மரியம் 7 வருட சிறை தண்டனை பெற்றுள்ளார்.  அவர் தேர்தலில் போட்டியிட தகுதி நீக்கம் செய்யப்பட்டு உள்ளார்.

நவாஸின் மனைவி குல்சூம் இங்கிலாந்தில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் கடந்த மாதத்தில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது.  அவருக்கு துணையாக நவாஸ் மற்றும் மகள் மரியம் லண்டன் நகரில் உள்ளனர்.  இந்த ஜூலை 13ந்தேதி பாகிஸ்தான் நாட்டிற்கு திரும்புவேன் என நவாஸ் ஷெரீப் லண்டனில் செய்தியாளர்களிடம் கூறினார்.  சிறையில் இருந்தும் எனது போராட்டத்தினை தொடருவேன் என்றும் அவர் கூறினார்.

இந்நிலையில், இந்த ஊழல் குற்றச்சாட்டு வழக்கில் நவாஸின் மருமகனான சப்தார் கைது செய்யப்பட்டு உள்ளார்.


Next Story