இங்கிலாந்தில் நச்சுப்பொருள் தாக்குதலுக்கு உள்ளான பெண் உயிரிழப்பு


இங்கிலாந்தில் நச்சுப்பொருள் தாக்குதலுக்கு உள்ளான பெண் உயிரிழப்பு
x
தினத்தந்தி 9 July 2018 12:59 PM GMT (Updated: 9 July 2018 12:59 PM GMT)

இங்கிலாந்தில் நச்சுப்பொருள் தாக்குதலுக்கு உள்ளான பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.



லண்டன், 

ரஷியாவின் ராணுவ உளவுப்பிரிவில் அதிகாரியாக பணியாற்றியவர் செர்ஜய் ஸ்கிர்பால் (வயது 66). இவர் சில ரஷிய உளவாளிகளை இங்கிலாந்து உளவுத்துறையினரிடம் காட்டி கொடுத்தமைக்காக கடந்த 2004-ம் ஆண்டு மாஸ்கோவில் கைது செய்யப்பட்டார். 13 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட அவரை 2010-ம் ஆண்டு இங்கிலாந்து மீட்டு அடைக்கலம் கொடுத்தது. தற்போது இங்கிலாந்தில் வசித்து வரும் ஸ்கிர்பால், கடந்த மார்ச் 4-ந் தேதி சாலிஸ்பரி நகரில் உள்ள ஒரு வணிக வளாகத்துக்கு வெளியே தனது மகள் யூலியாவுடன் (33) மயங்கிய நிலையில் கிடந்தார். அவர்களது உடலில் விஷம் ஏறியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 

இந்த சம்பவம் இங்கிலாந்துக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த தாக்குதலுக்கு ரஷியா தான் காரணம் என இங்கிலாந்து நேரடி குற்றச்சாட்டை முன்வைக்க, ரஷியா அதனை மறுத்தது. இந்த நிலையில் இங்கிலாந்தின் வில்டு‌ஷயர் கவுண்டியில் உள்ள சாலிஸ்பரி நகரில் வசித்து வந்த சார்லி ரோவ்லே (வயது 45), டான் ஸ்டர்கஸ் (44) என்ற தம்பதியர் கடந்த வாரம் தங்களது வீட்டில் சுயநினைவற்று, கவலைக்கிடமான நிலையில் கிடந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

பின்னர் நடந்த விசாரணையில் அவர்கள் இருவரும் ‘நோவிசோக்’ நச்சுப்பொருள் தாக்குதலுக்கு உள்ளானது தெரியவந்தது. ரஷிய உளவாளி மற்றும் அவருடைய மகள் மீது தாக்குதல் நடத்த பயன்படுத்தப்பட்ட அதே நச்சு பொருளால் இங்கிலாந்து தம்பதியர் தாக்குதலுக்கு உள்ளானது பல்வேறு சர்ச்சைகளுக்கு வழிவகுத்தது. இந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வந்த டான் ஸ்டர்கஸ், சிகிச்சை பலன் இன்றி இறந்தார். ஸ்காட்லாந்து யார்டு போலீசார் இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றம் செய்து தீவிர விசாரணையை தொடங்கி உள்ளனர்.
 
முன்னாள் ரஷ்ய உளவாளி ஸ்கிரிபால் மீது நடத்தப்பட்ட அதே நச்சுப்பொருளான நோவிச்சோக்கை பயன்படுத்தி தாக்குதலுக்கு உள்ளாகி இருப்பதாக காவல் துறை தெரிவிக்கிறது. இங்கிலாந்தில் இந்த மருந்தை கொண்டு வந்து கொடுத்தது யார் என்பது குழப்பமாக உள்ளது. இந்த மருந்து அடங்கிய பொருட்களை சப்ளை செய்தவர்களை கண்டுபிடிக்கும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. 

Next Story