ஐரோப்பிய ஒன்றியத்துடன் வர்த்தகத்துக்கு எதிர்ப்பு: இங்கிலாந்து மந்திரி திடீர் ராஜினாமா


ஐரோப்பிய ஒன்றியத்துடன் வர்த்தகத்துக்கு எதிர்ப்பு: இங்கிலாந்து மந்திரி திடீர் ராஜினாமா
x
தினத்தந்தி 9 July 2018 8:30 PM GMT (Updated: 9 July 2018 7:42 PM GMT)

ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைந்திருந்த இங்கிலாந்து, கடந்த 2016-ம் ஆண்டு நடத்திய பொதுவாக்கெடுப்பு முடிவின்படி, அந்த கூட்டமைப்பில் இருந்து பிரிய முடிவு செய்தது.

லண்டன், 

ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைந்திருந்த இங்கிலாந்து, கடந்த 2016-ம் ஆண்டு நடத்திய பொதுவாக்கெடுப்பு முடிவின்படி, அந்த கூட்டமைப்பில் இருந்து பிரிய முடிவு செய்தது. எனவே ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து முறைப்படி பிரிவதற்கான ஒப்பந்தத்தை இறுதி செய்ய பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

இதற்காக ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியின் மிக மூத்த தலைவரான டேவிட் டேவிஸ், இந்த துறைக்கு (பிரெக்சிட்) மந்திரியாக நியமிக்கப்பட்டார். இவர் ஐரோப்பிய கூட்டமைப்புடன் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்தார்.

இந்த நிலையில் ஐரோப்பிய ஒன்றியத்துடன் வர்த்தக உறவுகளை தொடர இங்கிலாந்து பிரதமர் தெரசா மே திட்டமிட்டு உள்ளார். இதற்கு இங்கிலாந்து மந்திரி சபையும் கடந்த 6-ந் தேதி ஒப்புதல் அளித்தது. ஆனால் பிரதமரின் இந்த முடிவு டேவிட் டேவிசுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. எனவே அவர் தனது பதவியை நேற்று முன்தினம் திடீரென ராஜினாமா செய்தார். அவரை தொடர்ந்து பிரெக்சிட் துறையின் இளநிலை மந்திரி ஸ்டீவ் பாக்கரும் பதவி விலகினார்.

தெரசா மேவின் மந்திரி சபையில் மிகவும் முக்கியமான மந்திரியாக இருந்த டேவிட் டேவிஸ், ராஜினாமா செய்திருப்பது பிரதமருக்கு பெருத்த இழப்பாக கருதப்படுகிறது. டேவிசுக்கு பதிலாக புதிய மந்திரி விரைவில் நியமிக்கப்படுவார் என பிரதமர் அலுவலகம் கூறியுள்ளது.

Next Story