அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக பிரெட் கவனாக்கை தேர்வு செய்தார் அதிபர் டிரம்ப்


அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக பிரெட் கவனாக்கை தேர்வு செய்தார் அதிபர் டிரம்ப்
x
தினத்தந்தி 10 July 2018 3:24 AM GMT (Updated: 10 July 2018 3:24 AM GMT)

அதிபர் டிரம்ப் அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக பிரெட் கவனாக்கை தேர்வு செய்துள்ளார். #USSupremeCourt #BrettKavanaugh

வாஷிங்டன்,

அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி அந்தோணி கென்னடி (வயது 81), இந்த மாதம் 31-ந் தேதி ஓய்வு பெறுகிறார். இதனால் ஏற்படுகிற காலி இடத்தை நிரப்புவதற்கான பணியில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் ஈடுபட்டு வந்தார்.

முதலில் அவர் தகுதியான 25 பேரது பட்டியலை தயார் செய்து அதில் 4-பேரிடம் கடந்த 2-ந் தேதி நேர்காணல் நடத்தினார். இதைத் தொடர்ந்து மேலும் 3 நீதிபதிகளிடமும், 3 தனி நபர்களிடமும் நேர்காணல் நடத்திய டிரம்ப், நீதிபதி பதவிக்கு 3 பேர் கொண்ட இறுதிப்பட்டியலை தயார் செய்தார். 

அந்த பட்டியலில் பிரெட் கவனாக், எமி கோனி பேரட் மற்றும் ரேமண்ட் கெத்லெட்ஜ் ஆகிய 3 பேரின் பெயர்கள் இடம் பெற்று இருந்ததாக தேசிய பொது வானொலி செய்தி கூறியிருந்தது. இந்த 3 பேரில் முதல் 2 பேரில் ஒருவரை டிரம்ப் தேர்வு செய்யலாம் என தகவல்கள் வெளிவந்தன. இந்நிலையில், வெள்ளை மாளிகையில் தொலைக்காட்சி உரையில் பேசிய அதிபர் டிரம்ப், அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக பிரெட் கவனாக்கை தேர்வு செய்வதாக அறிவித்தார். அமெரிக்காவில் இப்பதவிக்கு கவனாக்கை விட தகுதியானவர்கள் யாரும் இல்லை என டிரம்ப் கூறியுள்ளார். 

இந்நிலையில் அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக தேர்வாகியிருக்கும் 53 வயதான பிரெட் கவனாக், முன்னாள் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் ஆட்சிக்காலத்தில் கொலம்பியா மாவட்டத்திலுள்ள மத்திய மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் பதவி புரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 


Next Story