ஜப்பானில் தொடர் கனமழை; பலி எண்ணிக்கை 179 ஆக உயர்வு


ஜப்பானில் தொடர் கனமழை; பலி எண்ணிக்கை 179 ஆக உயர்வு
x
தினத்தந்தி 11 July 2018 6:23 AM GMT (Updated: 11 July 2018 6:23 AM GMT)

ஜப்பானில் மழை மற்றும் வெள்ளத்தில் பலியானோரின் எண்ணிக்கை 179 ஆக உயர்வடைந்து உள்ளது. #PMShinzoAbe

டோக்கியோ,

ஜப்பான் நாட்டின் மேற்கு பகுதியில் கடந்த ஒரு வாரத்தில் பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் ஏற்பட்ட வெள்ளத்தில் பலரது வீடுகள் மூழ்கியுள்ளன.  பல இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டு உள்ளன. இதன்காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி உள்ளது.

இந்த தொடர்மழை மற்றும் வெள்ளம் தொடர்பான சம்பவங்களில் பலி எண்ணிக்கை 179 ஆக உயர்ந்துள்ளது.  50க்கும் மேற்பட்டோரை காணவில்லை.  நூற்றுக்கணக்கானோர் காயமடைந்து உள்ளனர்.

இதுவரை 2 லட்சத்து 76 ஆயிரம் வீடுகளுக்கு நீர் விநியோகம் இல்லை.  தாழ்வான பகுதியில் வசித்து வருகிற 20 லட்சம் பேர் தங்களது வீடுகளில் இருந்து வெளியேறுமாறு அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர்.  நில சரிவுகள் மற்றும் வெள்ளத்தினால் பலர் தங்களது வீடுகளில் சிக்கி உள்ளனர்.  சிலர் மேற்கூரைகளில் தங்கியுள்ளனர்.

வெள்ள பேரிடரை எதிர்கொள்வதற்காக ஜப்பான் அரசு அவசரகால மேலாண் மையம் ஒன்றை பிரதமர் அலுவலகத்தில் அமைத்துள்ளது.  மேற்கு மற்றும் தென்மேற்கு ஜப்பானின் பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பப்பட்டு உள்ள ராணுவம், போலீசார் மற்றும் தீயணைப்பு துறையை சேர்ந்தவர்களின் எண்ணிக்கை 73 ஆயிரம் ஆக அதிகரிக்கப்பட்டு உள்ளது.

கடந்த 36 வருடங்களில் இல்லாத வகையில் ஜப்பானில் ஏற்பட்டுள்ள மழை மற்றும் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மேற்கு பகுதியை பார்வையிட அந்நாட்டு பிரதமர் ஷின்ஜோ அபே இன்று செல்கிறார்.

அவர் மழையால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்றான ஒகாயாம மாகாணத்திற்கு இன்று செல்கிறார்.

ஜப்பானில் மழை மற்றும் வெள்ளத்தில் பலியானோரின் எண்ணிக்கை 179 ஆக உயர்வடைந்து உள்ளது என அரசு தகவல் தெரிவிக்கின்றது.  அங்கு மீண்டும் வெள்ள பாதிப்புகள் ஏற்படும் ஆபத்து உள்ளது என தகவல் தெரிவிக்கின்றது.  தொடர்ந்து தேடுதல் மற்றும் மீட்பு பணிகள் நடந்து வருகின்றன.

Next Story