இலங்கையில் போதைப்பொருள் கடத்தினால் தூக்கு மந்திரிசபை ஒப்புதல் வழங்கியது


இலங்கையில் போதைப்பொருள் கடத்தினால் தூக்கு மந்திரிசபை ஒப்புதல் வழங்கியது
x
தினத்தந்தி 11 July 2018 10:45 PM GMT (Updated: 11 July 2018 10:31 PM GMT)

இலங்கையில் போதைப்பொருள் கடத்தல், விற்பனை செய்தல் உள்ளிட்ட குற்றங்களுக்கு மரண தண்டனை (தூக்கு தண்டனை) விதிக்க, அந்த நாட்டின் மந்திரிசபை நேற்று ஒப்புதல் வழங்கியது.

கொழும்பு,

இலங்கையில் போதைப்பொருள் கடத்தல், விற்பனை செய்தல் உள்ளிட்ட குற்றங்களுக்கு மரண தண்டனை (தூக்கு தண்டனை) விதிக்க, அந்த நாட்டின் மந்திரிசபை நேற்று ஒப்புதல் வழங்கியது. இலங்கையில் இதன்மூலம் சுமார் 40 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் மரண தண்டனையை அமலுக்கு கொண்டு வர வழி பிறந்து உள்ளது.

அங்கு 1978-ம் ஆண்டு முதல் அதிபர் பதவி வகித்த யாரும், எந்தவொரு மரண தண்டனை கைதிக்கும் தண்டனையை நிறைவேற்றுவதற்கான மரண கட்டளை பிறப்பிக்க மறுத்து வந்தனர். மரண தண்டனை விதிக்கும் நடைமுறை சட்ட அளவில் இருந்து வந்தாலும், 1976-ம் ஆண்டுக்கு பிறகு அங்கு யாரும் தூக்கில் போடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில்தான் இப்போது போதைப்பொருள் தொடர்பான குற்றங்களை செய்வோருக்கு மரண தண்டனை விதிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது.

இதுபற்றி அந்த நாட்டின் புத்த ஒழுங்குத்துறை மந்திரி காமினி மைத்ரிபால பெரேரா கூறுகையில், “மிக பயங்கரமான குற்றங்களை தடுக்க வேண்டும் என்று சொன்னால் மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்று தனக்கு அழுத்தம் வருவதாக அதிபர் சிறிசேனா சமீபத்தில் குறிப்பிட்டார். இப்போது மந்திரிசபை அதற்கு ஒருமித்த ஆதரவு தெரிவித்தது. சிறைக்குள் இருக்கும் கைதிகள் நாட்டை அழிப்பதை நாங்கள் அனுமதிக்க முடியாது. சிறைக்குள் இருந்து கொண்டே கைதிகள் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபடுகின்றனர்” என்று குறிப்பிட்டார்.

Next Story