பாகிஸ்தானில் தேர்தல் பிரச்சாரத்தின் போது குண்டு வெடிப்பு: 4 பேர் பலி


பாகிஸ்தானில் தேர்தல் பிரச்சாரத்தின் போது குண்டு வெடிப்பு: 4 பேர் பலி
x
தினத்தந்தி 13 July 2018 8:14 AM GMT (Updated: 13 July 2018 8:14 AM GMT)

பாகிஸ்தானில் தேர்தல் பிரச்சாரத்தின் போது நிகழ்ந்த குண்டு வெடிப்பில் 4 பேர் உயிரிழந்தனர். மேலும் 14 பேர் படுகாயமடைந்தனர். #PakPollBlast

பெஷாவர்,

பாகிஸ்தான் நாட்டில் ஆளும் கட்சியின் ஆட்சிக்காலம் கடந்த மே மாதம் 31-ஆம் தேதியுடன் முடிவடைந்தது. இதையடுத்து புதிய பிரதமரை தேர்ந்தெடுக்க தேர்தல் நடக்கவுள்ளது. இந்த நாடாளுமன்ற பொதுத்தேர்தல் வருகிற ஜூலை மாதம் 25-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதற்காக அந்த நாட்டில் தீவிர தேர்தல் பிரச்சாரம் நடந்து வரும் நிலையில், வேட்பாளர்களை கொல்ல தீவிரவாதிகள் சதித்திட்டம் தீட்டியிருப்பதாக தகவல் வெளியாகியது.

இந்நிலையில் பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் உள்ள பான்னு மற்றும் வடக்கு வசிரிஷ்தான் மாவட்ட எல்லைப்பகுதியில் தேர்தல் பிரச்சாரக்கூட்டம் ஒன்று நடைபெற்றது. அப்போது கூட்டத்திலிருந்து சுமார் 40 மீட்டர் தொலைவிலிருந்த இரு சக்கர வாகனம் ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த குண்டு ஒன்று திடீரென வெடித்தது. இந்த பயங்கர விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். மேலும் 14 பேர் படுகாயமடைந்தனர். இந்த விபத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் மற்றும் ஜாமியாத் யுலேமா ஈ இஸ்லாம் ஃபசில் கட்சியின் தலைவருமான அக்ரம் துரானி உடலில் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். இதனிடையே படுகாயமடைந்தவர்கள் அருகிலுள்ள உள்ளூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் 5 பேர் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. 

இதனிடையே பாகிஸ்தான் நாட்டில் ஜூலை 25-ந் தேதி நடக்கவிருக்கும் தேர்தலையொட்டி நடைபெறும் பிரச்சாரங்களில் குண்டு வெடிப்பது இது மூன்றாவது முறையாகும். இதற்கு முன்னர் கடந்த ஜூலை மாதம் 10-ந் தேதி பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியிலுள்ள பெஷாவர் நகரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது நிகழ்ந்த குண்டு வெடிப்பில் 14 பேர் பலியாகினர். 30 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். மேலும் அவாமி தேசிய கட்சியின் தலைவர் ஹரோன் பிலார் சம்பவ இடத்திலேயே பலியாகினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story