பாகிஸ்தானில் தேர்தல் பிரசாரத்தில் குண்டுவெடிப்பு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 85 ஆக உயர்வு


பாகிஸ்தானில் தேர்தல் பிரசாரத்தில் குண்டுவெடிப்பு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 85 ஆக உயர்வு
x
தினத்தந்தி 13 July 2018 3:32 PM GMT (Updated: 13 July 2018 3:41 PM GMT)

பாகிஸ்தானில் தேர்தல் பிரசாரத்தின் போது வெடிகுண்டு வெடித்ததில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 85 ஆக உயர்ந்துள்ளது. #BalochistanBlast


இஸ்லாமாபாத்,

 பாகிஸ்தானில் வரும் 25–ந் தேதி நாடாளுமன்றத்துக்கும், சில மாகாண சட்டசபைகளுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது.

 இதையொட்டி அங்கு அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர பிரசாரத்திலும், ஓட்டு வேட்டையிலும் ஈடுபட்டு வருகின்றன. ஏற்கனவே பிரசாரத்தின் போது 6 அரசியல் கட்சி தலைவர்களது உயிருக்கு ஆபத்து உள்ளதாக பட்டியல் வெளியிட்டு, தேசிய பயங்கரவாத தடுப்பு ஆணையம் எச்சரிக்கை விடுத்தது. கைபர் பக்துங்வா மாகாணத்தில் கடந்த 10–ந் தேதி இரவு நடத்தப்பட்ட தாக்குதலில் அவாமி தேசிய கட்சியின் மூத்த தலைவர் ஹாரூண் பிலோர் உள்பட 20 பேர் தற்கொலைப் படை தாக்குதலில் கொல்லப்பட்டார். பாகிஸ்தானில் தேர்தல் பிரசாரத்தின்போது குண்டுவெடிப்புகள் நடந்து வருவது அரசியல் கட்சிகளை பதற்றத்தில் ஆழ்த்தி உள்ளது.

இந்நிலையில் மஸ்தாங் மாவட்டத்தில் பலுசிஸ்தான் அவாமி கட்சியின் பேரணியை குறிவைத்து பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

பலுசிஸ்தான் மாகாணம் மஸ்தாங்கில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் தொகுதியின் வேட்பாளர் மிர் சிராஜ் ராய்சானி உள்பட  33 பேர் உயிரிழந்தனர் என தகவல்கள் வெளியாகியது. இப்போது அரசு தரப்பில் உயிரிழப்பு எண்ணிக்கை 85 ஆக உயர்ந்து உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 150 பேர்  காயம் அடைந்து உள்ளனர், அவர்களில் 15 பேர் வரையில் மோசமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 8 முதல் 10 கிலோ எடைக்கொண்ட வெடிப்பொருள் வெடிக்கப்பட்டுள்ளது என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

காலையில் வடக்கு வாஜிரிஸ்தான் எல்லையில் அமைந்து உள்ள பான்னு என்ற இடத்தில்  தேர்தல் பிரசார மேடை அருகே நடந்த குண்டுவெடிப்பில் இஸ்லாமிய கட்சி தலைவர் காயங்களுடன் தப்பினார். அதே நேரத்தில் வேறு 5 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். பாகிஸ்தானில் தேர்தலையொட்டி வன்முறை அதிகரித்து உள்ளது மக்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே இந்த தாக்குதல்களுக்கு எந்தஒரு பயங்கரவாத இயக்கமும் பொறுப்பு ஏற்கவில்லை. 

Next Story