இரு நாட்டு உறவை பலப்படுத்த வங்காளதேசம் சென்றடைந்தார் ராஜ்நாத்சிங்


இரு நாட்டு உறவை பலப்படுத்த வங்காளதேசம் சென்றடைந்தார் ராஜ்நாத்சிங்
x
தினத்தந்தி 14 July 2018 1:24 AM GMT (Updated: 14 July 2018 1:24 AM GMT)

இரு நாட்டு நட்புறவை பலப்படுத்த உள்துறை அமைச்சக மூத்த நிர்வாகிகளுடன் மூன்று நாள் பயணமாக வங்காளதேசம் சென்றடைந்தார் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத். #RajnathSingh

டாக்கா,

உள்துறை அமைச்சக மூத்த நிர்வாகிகளுடன் மூன்று நாள் பயணமாக வங்காளதேசம் சென்றடைந்திருக்கும் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத், இரு நாடுகள் தொடர்பான பாதுகாப்பை பலப்படுத்த பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளார். முன்னதாக வங்காளதேசம் சென்றடைந்த ராஜ்நாத் சிங்கை, அந்நாட்டு பிரதிநிதி அசாதுஷ்ஷமான் கான் கமால் விமானநிலையத்தில் சிறப்பான முறையில் வரவேற்றார். 

இச்சுற்றுப்பயணத்தில் வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசினாவை சந்திக்கும் ராஜ்நாத் சிங், பயங்கரவாத எதிர்ப்பு, இளைஞர்களை தீவிரவாதத்தில் ஈடுபட முயற்சிக்கும் பயங்கரவாத அமைப்புகள், எல்லை தாண்டி கள்ள நோட்டுகள் அதிகரித்தல் குறித்து இரு தரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபடுகிறார். மேலும் இருவருக்குமிடையே ரோஹிங்யா பிரச்சனை குறித்த விவாதங்கள் நடைபெறும் என்ற தகவல் வெளிவந்துள்ளது. முன்னதாக வங்காளதேசம் செல்வதற்கு முன் சமூக வலைதளமான டுவிட்டரில் கருத்து தெரிவித்த ராஜ்நாத் சிங், ”இந்தியா மற்றும் வங்காளதேச நாடுகள் நிலம் மற்றும் கடல்வழி எல்லைகளில் அமைதியான சூழ்நிலை நிலவுவதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டுள்ளன. இந்நிலையில் இரு நாட்டு நட்புறவை பேச்சுவார்த்தையின் மூலம் மேலும் வலுப்படுத்தவுள்ளோம்” எனத் தெரிவித்திருந்தார்.

இதனிடையே வங்காளதேசம் சென்றடைந்திருக்கும் ராஜ்நாத்சிங் டுவிட்டரில், ”இந்தியா மற்றும் வங்காளதேச நாடுகளுக்கிடையேயான உறவு மொழி, கலாச்சாரம், ஜனநாயகம் என அனைத்து விதத்திலும் வரலாற்று தொன்மை மிக்கது. வங்காளதேசத்துடன் நட்புறவு மேற்கொள்வதற்கு இந்தியா மிகவும் முக்கியத்துவம் அளிக்கிறது” எனத் தெரிவித்திருந்தார்.

Next Story