பாகிஸ்தானில் பதற்றம் ஓட்டு போட மக்கள் வருவார்களா?


பாகிஸ்தானில் பதற்றம் ஓட்டு போட மக்கள் வருவார்களா?
x
தினத்தந்தி 14 July 2018 10:15 PM GMT (Updated: 14 July 2018 8:31 PM GMT)

தேர்தலையொட்டிய தாக்குதல்களில் 133 பேர் பலியானதால், பாகிஸ்தானில் பதற்றம் நிலவுகிறது. ஓட்டு போட மக்கள் வருவார்களா என்ற கேள்வி எழுந்து உள்ளது.

இஸ்லாமாபாத்,

பயங்கரவாதத்துக்கு பெயர் பெற்ற பாகிஸ்தானில் 25–ந் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடக்க உள்ளது. அத்துடன் சில மாகாண சட்டசபைகளுக்கும் தேர்தல் நடக்கிறது.

இந்த நாடாளுமன்ற தேர்தலில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் போட்டியிட முடியாமல் போய் விட்டது. ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டதால் அவரது மகள் மரியமும் போட்டியிட வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது.

பிரதமர் பதவிக்கு நவாஸ் ஷெரீப்பின் தம்பி ஷெபாஸ் ஷெரீப், பாகிஸ்தான் தெஹ்ரிக் இ இன்சாப் கட்சி தலைவர் இம்ரான்கான், பாகிஸ்தான் மக்கள் கட்சி தலைவர் பிலாவல் பூட்டோ ஆகிய 3 பேரும் குறிவைத்து உள்ளனர். தேர்தல் பிரசாரம் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

அதே நேரத்தில் இந்த தேர்தலில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு பயங்கரவாத தாக்குதல்கள் நடந்தவண்ணம் உள்ளன.

நேற்று முன்தினம் ஒரே நாளில் நடந்த 2 தாக்குதல்களில், 133 பேர் பலி ஆகி இருப்பது பாகிஸ்தானை பதற்றத்தின் பிடியில் ஆழ்த்தி விட்டது.

முதல் தாக்குதல், ஜாமியத் உலமா இ இஸ்லாம் பாசில் கட்சியின் தலைவர் அக்ரம் கான் துர்ரானி, கைபர் பக்துங்வா மாகாணத்தில் வடக்கு வாஜிரிஸ்தான் எல்லையில் அமைந்து உள்ள பான்னு என்ற இடத்தில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு விட்டு திரும்பிக்கொண்டு இருந்தபோது நடந்தது. அப்போது மோட்டார் சைக்கிளில் பொருத்தி வைக்கப்பட்டு இருந்த வெடிகுண்டு ‘ரிமோட்’ முறையில் வெடிக்க வைக்கப்பட்டது.

துர்ரானியை குறிவைத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் அவர் லேசான காயத்துடன் தப்பினாலும், வேறு 5 பேர் உயிரிழந்தனர்.

இந்த தாக்குதல் நடந்த அடுத்த சில மணி நேரத்தில் பலுசிஸ்தான் மாகாணத்தில் மாஸ்துங் பகுதியில் பலுசிஸ்தான் அவாமி கட்சியின் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் அந்தக் கட்சியின் தலைவர்களில் ஒருவரும், வேட்பாளர்களில் ஒருவரான சிராஜ் ரைசனி கலந்து கொண்டு இருந்தார். அப்போது பலத்த சத்தத்துடன் பயங்கர குண்டுவெடிப்பு நடந்தது. இந்த குண்டு வெடிப்பால் அந்தப் பகுதியே அதிர்ந்தது.

கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தவர்கள் அலறியவாறு நாலாபக்கமும் ஓட்டம் எடுத்தனர்.

இந்த குண்டுவெடிப்பில் சிராஜ் ரைசனி உள்பட 90 பேர் கொல்லப்பட்டதாக முதல் கட்ட தகவல்கள் வெளியாகின. ஆனால் தற்கொலைப்படையினரால் நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் 128 பேர் கொன்று குவிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டு உள்ளது.

கொல்லப்பட்ட வேட்பாளர் சிராஜ் ரைசனி, பலுசிஸ்தான் மாகாண முன்னாள் முதல்–மந்திரி நவாப் அஸ்லாம் ரைசனியின் சகோதரர் ஆவார்.

சுமார் 120 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டு உள்ளனர். அவர்களில் பலரது நிலைமை மோசமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது.

இந்த குண்டுவெடிப்பில் 16–20 கிலோ எடை கொண்ட வெடிபொருட்கள் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என வெடிகுண்டு செயலிழப்பு படை அதிகாரிகள் நேற்று தெரிவித்தனர். இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது.

இந்த தாக்குதல்களுக்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது. இது கோழைத்தனமான தாக்குதல்கள் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ஹெதர் நவார்ட் கூறினார்.

தேர்தலையொட்டிய பயங்கரவாத தாக்குதல்கள் அதிகரித்து வருவதால் மக்களிடையே பதற்றம் அதிகரித்து வருகிறது. இதனால் 25–ந் தேதி ஓட்டுப்பதிவு நடக்கிறபோது, மக்கள் வாக்குச்சாவடிக்கு ஓட்டு போட திரண்டு வருவார்களா என்ற கேள்விக்குறி எழுந்து உள்ளது.

என்னதான் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டாலும், வாக்குப்பதிவு மந்தமாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story