டிரம்ப் நிர்வாகத்துக்கு கோர்ட்டு அதிரடி உத்தரவு


டிரம்ப் நிர்வாகத்துக்கு கோர்ட்டு அதிரடி உத்தரவு
x
தினத்தந்தி 14 July 2018 10:30 PM GMT (Updated: 14 July 2018 8:38 PM GMT)

அகதிகள் விவகாரத்தில் டிரம்ப் நிர்வாகத்துக்கு கோர்ட்டு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

வாஷிங்டன்,

மெக்சிகோவில் இருந்து அமெரிக்க எல்லைக்குள் உரிய ஆவணங்கள் இன்றி சட்டவிரோதமாக நுழைந்த அகதிகளையும், அவர்களது குழந்தைகளையும் பிரித்து காவலில் வைக்கும் கொள்கையை டிரம்ப் நிர்வாகம் அமல்படுத்தியது.

இதன்படி, அங்கு சுமார் 2 ஆயிரம் குழந்தைகள், பெற்றோர்களிடம் இருந்து பிரித்து வைக்கப்பட்டனர். இது அங்கு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. டிரம்பின் அகதிகள் கொள்கைக்கு அவரது மனைவி மெலனியா டிரம்ப், மகள் இவான்கா டிரம்ப் ஆகியோரும்கூட எதிர்ப்பு தெரிவித்தனர். கடைசியில் டிரம்ப் பணிந்தார். அகதிகளையும், அவர்களது குழந்தைகளையும் பிரிக்கும் கொள்கையை திரும்பப்பெற்றார்.

இந்த விவகாரம் தொடர்பாக அமெரிக்க மனித உரிமை யூனியன் ஒரு வழக்கை கலிபோர்னியா மாகாணம், சாண்டீகோவில் உள்ள கோர்ட்டில் தொடுத்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி டானா சாப்ரா, ‘‘ பிரித்து வைக்கப்பட்ட குழந்தைகளை மீண்டும் பெற்றோர்களுடன் கொண்டு வந்து சேர்ப்பதற்கு ஆகிற செலவை பெற்றோர்கள் தர வேண்டியது இல்லை. அமெரிக்க அரசுதான் இந்த செலவை ஏற்க வேண்டும்’’ என்று அதிரடியாக உத்தரவிட்டார்.

முதலில் ஒரு குழந்தையை பெற்றோருடன் இணைப்பதற்கு பெற்றோர் 1900 டாலர் (சுமார் ரூ. 1 லட்சத்து 29 ஆயிரம்) தர வேண்டும் என்று அதிகாரிகள் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.


Next Story