இந்தியாவிற்கு எதிராக பயங்கரவாத நடவடிக்கைக்கு எங்கள் மண்ணை பயன்படுத்த விடமாட்டோம் - வங்காளதேசம்


இந்தியாவிற்கு எதிராக பயங்கரவாத நடவடிக்கைக்கு எங்கள் மண்ணை பயன்படுத்த விடமாட்டோம் - வங்காளதேசம்
x
தினத்தந்தி 15 July 2018 1:53 PM GMT (Updated: 15 July 2018 1:53 PM GMT)

இந்தியாவிற்கு எதிராக பயங்கரவாத நடவடிக்கைக்கு எங்கள் மண்ணை பயன்படுத்த விடமாட்டோம் என வங்காளதேசம் உறுதியளித்துள்ளது.



டாக்கா, 

மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங், 3 நாள் பயணமாக வங்காளதேசம் சென்றுள்ளார். அவர் அந்த நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனாவை டாக்காவில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். அப்போது இருதரப்பு மற்றும் பிராந்திய பிரச்சினைகள் குறித்து இரு தலைவர்களும் பேசினர். பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை, ராணுவ ஒத்துழைப்பு, எல்லை பாதுகாப்பு, போலி ரூபாய் நோட்டுக்கள், போதைப்பொருள் கடத்தல், மனிதர்கள் கடத்தல் உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக இருதரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது. 

அப்போது, இந்தியா உள்பட அண்டைய நாடுகளுக்கு எதிராக பயங்கரவாத நடவடிக்கைக்கு எங்கள் மண்ணை பயன்படுத்த விடமாட்டோம் என வங்காளதேசம் உறுதியளித்துள்ளது.

பயங்கரவாத ஒழிப்பு குறித்து ஹசீனாவுடன் பேசிய ராஜ்நாத் சிங், ‘இந்த பிராந்திய நாடுகள் அனைத்தும் கைகோர்த்தால் பயங்கரவாதத்தை முற்றிலும் அழிக்க முடியும்’ என எடுத்துரைத்தார். அதற்கு பதிலளித்த ஹசீனா, எந்த நாட்டுக்கு எதிராகவும் பயங்கரவாத தாக்குதல்களை அரங்கேற்ற தனது நாட்டை பயங்கரவாதிகளின் தளமாக மாற்றுவதை அனுமதிக்கமாட்டோம் என உறுதிபட தெரிவித்தார். இந்தியாவும், வங்கதேசமும் பல முக்கிய பிரச்சினைகளை பேச்சுவார்த்தை மூலம் தீர்த்து இருப்பதாக கூறிய ஹசீனா, அதைப்போல மற்ற பிரச்சினைகளும் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கப்படும் என எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார். 

இதைத்தொடர்ந்து, ஷேக் ஹசீனாவுடனான சந்திப்பு திருப்திகரமாக அமைந்ததாக உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங், தனது டுவிட்டர் தளத்தில் கூறியுள்ளார்.


Next Story