அடியலா சிறையில் நவாஸ் ஷெரீப்புடன் குடும்பத்தினர் சந்திப்பு


அடியலா சிறையில் நவாஸ் ஷெரீப்புடன் குடும்பத்தினர் சந்திப்பு
x
தினத்தந்தி 15 July 2018 11:00 PM GMT (Updated: 15 July 2018 8:12 PM GMT)

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் ஊழல் வழக்கில் அடியலா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இஸ்லாமாபாத்,

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப், ஊழல் செய்து சம்பாதித்த பணத்தில் லண்டனில் ‘அவென்பீல்டு’ சொகுசு வீடுகள் வாங்கி குவித்ததாக தொடரப்பட்ட வழக்கில் அவரும், அவரது மகள் மரியமும், மருமகன் கேப்டன் சப்தாரும் தண்டிக்கப்பட்டனர்.

ராவல்பிண்டி அடியலா சிறையில் கேப்டன் சப்தார் ஏற்கனவே அடைக்கப்பட்ட நிலையில், நவாஸ் ஷெரீப்பும், அவரது மகள் மரியமும் 13–ந் தேதி இரவு லண்டனில் இருந்து திரும்பிய நிலையில், அந்த சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களுக்கு சிறையில் ‘பி’ வகுப்பு வழங்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் நவாஸ் ஷெரீப் தம்பி ஷாபாஸ் ஷெரீப், அவரது தாயார், மரியம் மகள் மெஹருன்னிஷா, ஷாபாஸ் ஷெரீப்பின் மகன் ஹம்சா ஆகியோர் நேற்று முன்தினம் இரவு லாகூரில் இருந்து இஸ்லாமாபாத்துக்கு தனி விமானத்தில் வந்தனர். அங்கிருந்து நேராக ராவல்பிண்டி அடியலா சிறைக்கு வந்தனர்.

அங்கு சிறை சூப்பிரண்டு அறையில் வைத்து நவாஸ் ஷெரீப், மரியம், கேப்டன் சப்தார் ஆகியோரை அவர்கள் சந்தித்து பேசினர். அரசிடம் இருந்து சிறப்பு அனுமதி பெற்று இந்த சந்திப்பு 2 மணி நேரத்துக்கும் மேலாக நடந்ததாக தகவல்கள் கூறுகின்றன.

முன்னதாக லாகூரில் நிருபர்களிடம் ஷாபாஸ் ஷெரீப் பேசுகையில், ‘‘‘அவென்பீல்டு வழக்கில் ஐகோர்ட்டில் நவாஸ் ஷெரீப் குடும்பத்தினருக்கு நிவாரணம் கிடைக்கும்’’ என நம்பிக்கை தெரிவித்தார்.


Next Story