2014 போருக்கு பின்னர் முதல் முறையாக ஹமாஸ் இயக்கத்தினரை குறிவைத்து கடும் தாக்குதல்


2014 போருக்கு பின்னர் முதல் முறையாக ஹமாஸ் இயக்கத்தினரை குறிவைத்து கடும் தாக்குதல்
x
தினத்தந்தி 15 July 2018 11:30 PM GMT (Updated: 15 July 2018 8:25 PM GMT)

2014 போருக்கு பின்னர் முதல் முறையாக ஹமாஸ் இயக்கத்தினரை குறிவைத்து கடும் தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேட்டன்யாஹூ கூறினார்.

ஜெருசலேம்,

இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனுக்கும் நீண்ட காலமாக மோதல் போக்கு நிலவி வருகிறது.

பாலஸ்தீனில் ஹமாஸ் இயக்கம் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இஸ்ரேல் ராணுவத்தினர் மீது தொடர் தாக்குதல்களில் ஈடுபட்டு வருகிற ஹமாஸ் இயக்கம், பாலஸ்தீன மக்களிடையே ஆதரவு பெற்று உள்ளது.

இஸ்ரேலை பாலஸ்தீனர்களுக்கு மீட்டுக்கொடுத்து இஸ்ரேல், மேற்குக்கரை, காசா ஆகிய பகுதிகளைக் கொண்ட இஸ்லாமிய குடியரசாக மாற்றுவதே ஹமாஸ் இயக்கத்தினர் குறிக்கோள்.

ஆனால் இஸ்ரேலுக்கு ஹமாஸ் இயக்கத்தினரையும் பிடிக்காது, அவர்களின் நோக்கமும் பிடிக்காது. எனவே பயங்கரவாதிகள் என அவர்களை முத்திரை குத்தி வைத்து உள்ளது.

இஸ்ரேல் ராணுவத்தினருக்கும், ஹமாஸ் இயக்கத்தினருக்கும் இடையே சமீப காலமாக அடிக்கடி மோதல்கள் நடந்து வருகின்றன.

இந்த நிலையில், காசா பகுதியில் இருந்து இஸ்ரேல் மீது ஹமாஸ் இயக்கத்தினர் டஜன் கணக்கில் ராக்கெட்டுகளை வீசி தாக்குதல் தொடுத்தனர்.

ஒரு ராக்கெட் ஸ்தேரோட் நகர்மீது விழுந்தது. அதில் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

தற்போது இஸ்ரேலாக இருக்கும் பகுதியில் உள்ள தங்கள் மூதாதையர் இல்லத்துக்கு செல்வதற்கான உரிமைகளுக்காக ஆயிரக்கணக்கான பாலஸ்தீனர்கள் எல்லைப்பகுதியில் போராட்டம் நடத்தி வருகிற நிலையில், இஸ்ரேல் மீது ஹமாஸ் இயக்கத்தினர் ராக்கெட் தாக்குதல் நடத்தி உள்ளனர்.

இது இஸ்ரேலுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. உடனடியாக ஹமாஸ் இயக்கத்தினருக்கு பதிலடி கொடுத்தது. இதில், அந்த இயக்கத்தினரின் பெய்ட்லாஹியா படைப்பிரிவு தலைமையகம், வடக்கு காசாவில் அமைந்து உள்ள பயிற்சி முகாம், ஆயுத கிடங்குகள், ராக்கெட் லாஞ்சர்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகின.

இந்த தாக்குதல் தொடர்பாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேட்டன் யாஹூ ஒரு வீடியோ செய்தி வெளியிட்டு உள்ளார்.

அதில் அவர், ‘‘ராணுவ மந்திரி, ராணுவ தளபதி, இஸ்ரேல் பாதுகாப்பு கட்டளை தலைவர் ஆகியோருடன் கலந்தாலோசனை நடத்தப்பட்டது. அதில் ஹமாஸ் இயக்கத்தினரின் பயங்கரவாதத்தை எதிர்த்து வலுவான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து, 2014–ம் ஆண்டு நடந்த போருக்கு பின்னர் ஹமாஸ் இயக்கத்தினரை குறிவைத்து இப்போது முதல் முறையாக கடும் தாக்குதல் நடத்தப்பட்டது. தேவைப்பட்டால் இந்த தாக்குதல் மேலும் அதிகரிக்கப்படும்’’ என்று கூறினார்.

காசா நகரில் இஸ்ரேல் நடத்திய வான்தாக்குதலில் 2 பேர் பலியானதாகவும், 12 பேர் படுகாயம் அடைந்ததாகவும் பாலஸ்தீன சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதற்கிடையே ஹமாஸ் இயக்கத்தினர் கூறுகையில், ‘‘எல்லையில் வெள்ளிக்கிழமை நடந்த போராட்டத்தின்போது மேலும் ஒரு பாலஸ்தீனர் கொல்லப்பட்டு உள்ளார்’’ என்றனர்.

மேலும் சமீப காலமாக நடந்து வருகிற போராட்டங்களில் 130 பாலஸ்தீனர்களை இஸ்ரேல் ராணுவம் கொன்று விட்டது. 15 ஆயிரம் பேர் காயம் அடைந்து உள்ளனர் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.


Next Story