பாகிஸ்தானில் தீவிரவாதிகள் தாக்குதலில் அவாமி தேசிய கட்சியின் மூத்த தலைவர் உயிர் தப்பினார்


பாகிஸ்தானில் தீவிரவாதிகள் தாக்குதலில் அவாமி தேசிய கட்சியின் மூத்த தலைவர் உயிர் தப்பினார்
x
தினத்தந்தி 16 July 2018 1:44 PM GMT (Updated: 16 July 2018 1:44 PM GMT)

பாகிஸ்தானில் தீவிரவாதிகள் தாக்குதலில் அவாமி தேசிய கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் உயிர் தப்பியுள்ளார்.

கராச்சி,

பாகிஸ்தானில் வருகிற 25ந்தேதி பொது தேர்தல் நடைபெறுகிறது.  இதற்கான தேர்தல் பிரசாரத்தின்போது அந்நாட்டின் 6 அரசியல் தலைவர்களின் உயிருக்கு ஆபத்து உள்ளது என தேசிய பயங்கரவாத தடுப்பு ஆணையம் எச்சரிக்கை தெரிவித்துள்ளது.

அந்த பட்டியலில் முன்னாள் கிரிக்கெட் வீரரும், பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சியின் தலைவருமான இம்ரான்கான், அவாமி தேசிய கட்சி தலைவர்கள் அஸ்பந்தியர் வாலி, அமீர் ஹைதர் ஹோட்டி, காமி வதான் கட்சி தலைவர் அப்தாப் ஷெர்பாவ், ஜாமியத் உலமா இ இஸ்லாம் பாசில் தலைவர் அக்ரம் கான் துர்ரானி, மும்பை தாக்குதல் பயங்கரவாதி ஹபீஸ் சயீத்தின் மகன் டால்ஹா சயீத் ஆகியோர் இடம் பெற்று உள்ளனர்.

பாகிஸ்தான் மக்கள் கட்சி, பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சி தலைவர்களின் உயிருக்கும் ஆபத்து உள்ளதாக தேசிய பயங்கரவாத தடுப்பு ஆணையத்தின் இயக்குனர் ஒபைத் பரூக் கூறினார்.

இந்த நிலையில், அந்நாட்டின் வடமேற்கே பெஷாவர் நகரில் யாகாடூட் பகுதியில் கடந்த 10ந்தேதி இரவு அவாமி தேசிய கட்சி தலைவர் பிலார் கூட்டம் ஒன்றை நடத்தினார்.  இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள அவரது கட்சியின் தொண்டர்கள் கூடியிருந்தனர்.

அவர் கூட்டத்தில் பங்கேற்க மேடைக்கு வந்தபொழுது பட்டாசுகள் வெடிக்கப்பட்டன.  இதனை பயன்படுத்தி கொண்ட மர்ம நபர் தற்கொலை வெடிகுண்டை வெடிக்க செய்துள்ளார்.

இதில் பலத்த காயமடைந்த பிலார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் மரணமடைந்து விட்டார்.  அவருடன் சேர்த்து 20 பேர் கொல்லப்பட்டனர்.

இதேபோன்று மற்றொரு சம்பவத்தில் அவாமி கட்சி தலைவர் ரைசானி உள்பட 130 பேர் தற்கொலை வெடிகுண்டு தாக்குதலில் கொல்லப்பட்டனர்.  200 பேர் காயமடைந்தனர்.

இந்த நிலையில், பாகிஸ்தானில் பலுசிஸ்தான் மாகாணத்தில் அப்துல்லா பகுதியில் அவாமி தேசிய கட்சியின் தலைவர்களில் ஒருவரான தவுத் அசாக்ஜை என்பவர் கட்சி தொண்டர்களை இன்று சந்தித்து பேசி உள்ளார்.

அவரை நோக்கி தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.  இதில் வலது கையில் குண்டு காயம் பட்ட அவரை குவெட்டா நகரில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.  அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  ஆபத்து கட்டத்தினை அவர் கடந்து விட்டார் என தகவல் தெரிவிக்கின்றது.

Next Story