‘சிங்கத்தின் வாலைப் பிடித்து விளையாடினால் வருத்தப்பட வேண்டியது வரும்’ அமெரிக்காவுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை


‘சிங்கத்தின் வாலைப் பிடித்து விளையாடினால் வருத்தப்பட வேண்டியது வரும்’ அமெரிக்காவுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை
x
தினத்தந்தி 22 July 2018 12:46 PM GMT (Updated: 22 July 2018 12:46 PM GMT)

‘சிங்கத்தின் வாலைப் பிடித்து விளையாடினால் வருத்தப்பட வேண்டியது வரும்’ என அமெரிக்காவுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. #DonaldTrump #Iran


டெக்ரான், 

 அமெரிக்க ஜனாதிபதியாக ஒபாமா இருந்தபோது, கடந்த 2015-ம் ஆண்டு வல்லரசு நாடுகளான அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷியா, பிரான்ஸ், சீனா மற்றும் ஜெர்மனியுடன் ஈரான் வரலாற்று சிறப்பு வாய்ந்த அணு ஆயுத தவிர்ப்பு ஒப்பந்தம் ஒன்றை செய்துகொண்டது. இதை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலும் ஏற்றுக்கொண்டது. முழுமையான கூட்டு செயல் திட்டம் என்ற பெயரிலான இந்த ஒப்பந்தம், 2015-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 18-ந் தேதி அமலுக்கு வந்தது.

இதன் 2 முக்கிய அம்சங்கள், ஈரான் அணு ஆயுத திட்டங்களை செயல்படுத்துவதை கை விட வேண்டும். குறிப்பாக செறிவூட்டப்பட்ட யுரேனிய கையிருப்பை ஈரான் 15 ஆண்டுகளில் குறைக்க வேண்டும்; இதற்கான எந்திரத்தை நிறுவுவதை 10 ஆண்டுகளில் குறைக்க வேண்டும்; இதற்கு பதிலாக அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் அந்த நாட்டின் மீது விதித்த பொருளாதார தடைகளை திரும்பப்பெற வேண்டும் என்பதாகும். ஆனால் அமெரிக்க ஜனாதிபதியாக 2017-ம் ஆண்டு ஜனவரி 20-ந் தேதி பதவிக்கு வந்த டொனால்டு டிரம்ப், இந்த ஒப்பந்தத்தை கடுமையாக சாடினார்.

 ஒப்பந்தம் தங்கள் நாட்டின் நலனுக்கு எதிரானது என கூறி அமெரிக்கா கடந்த மே மாதம், அதில் இருந்து விலகிவிட்டது. மேலும் ஈரான் மீது பொருளாதார தடைகள் தொடரும் என்றும் அறிவித்தது. இது ஈரானுக்கு நெருக்கடியை ஏற்படுத்துவதாக அமைந்து உள்ளது. இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகள் ஈரான் அணு ஆயுத ஒப்பந்த அமலாக்கத்தை தடை செய்யக்கூடாது என அமெரிக்காவை வலியுறுத்தின.
இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டு உள்ள எஞ்சிய நாடுகளுடன் இணைந்து செயல்படப்போவதாக அவை அறிவித்து உள்ளன. ரஷியாவும், சீனாவும் ஏற்கனவே ஆதரவு தெரிவித்து இருக்கின்றன. அமெரிக்காவின் விலகலுக்கு ஐ.நா. சபை வருத்தம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் ஈரான் வெளியுறவு அதிகாரிகள் மத்தியில் அதிபர் ஹசன் ரூஹானி பேசுகையில் அமெரிக்காவுக்கு கடும் எச்சரிக்கை விடுக்கும் விதத்தில், டிரம்ப் அவர்களே, சிங்கத்தின் வாலைப் பிடித்து விளையாடாதீர்கள். பின்னால் இதற்காக நீங்கள் வருத்தப்பட வேண்டியது வரும். ஈரானுடன் சமாதானமாக போங்கள். சமாதானத்தின் தாய், ஈரான். அதே நேரத்தில் ஈரானுடன் போரிட்டால், ஈரான் போர்களின் தாய் என்பதை உணர வேண்டியது வரும். நாட்டின் பாதுகாப்புக்கும், நலன்களுக்கும் எதிராக ஈரானை நீங்கள் தூண்டி விடும் நிலையில் இல்லை என குறிப்பிட்டார்.  

Next Story