கடத்தப்படும் சிறுமிகள் பாலியல் தொழிலில் தள்ளப்படுவதற்காக ஹார்மோன் ஊசி போடப்படும் கொடுமை


கடத்தப்படும் சிறுமிகள்  பாலியல் தொழிலில் தள்ளப்படுவதற்காக ஹார்மோன் ஊசி போடப்படும் கொடுமை
x
தினத்தந்தி 23 July 2018 10:46 AM GMT (Updated: 23 July 2018 10:46 AM GMT)

பாலியல் தொழிலில் தள்ளுவதற்காக கடத்தப்படும் சிறுமிகளுக்கு ஹார்மோன் ஊசி போடப்படும் கொடுமை நடந்து வருகிறது.


2010 மற்றும் 2012 ஆம் ஆண்டு  மனித கடத்தல்  குற்றங்களுக்காக தண்டிக்கபட்டவர்களில் 28 சதவீதத்தினர் பெண்கள். இவர்கள் பெரும்பாலும் பாதிக்கப்பட்டவர்களின்   பாதுகாவலர்களாகவோ அல்லது அவர்களை தத்து  எடுப்பவர்களாகவோ இருந்து உள்ளனர். மேலும் தண்டனை பெற்றவர்களில் 10 முதல் 15 சதவீத பெண்கள் தீவிர குற்றங்களில் தண்டனை பெற்றவர்கள்.

மனித கடத்தலில் பாதிக்கப்படுவது 33 சதவீதம் குழந்தைகள் தான்.  இதில் 3ல் 2 பங்கு பெண் குழந்தைகள். 2014  மதிப்பீட்டின் படி  உலகில்  3.60 கோடி மக்கள் அடிமைகளாக உள்ளனர். இதில் பாலியல் துன்புறுத்தல் மற்றும் கட்டாய வேலை எடுத்தல் ஆகியவையும் அடங்கும்  என கூறப்பட்டு உள்ளது.

சமீபத்தில் வளைகுடா நாடுகளுக்கு சட்டவிரோதமாக நேபாளத்திலிருந்து ஏழைப் பெண்கள் கடத்தப்படுவது அதிகரித்துள்ளது. 

கடத்தப்படும் சிறுமிகளை உடல் முதிர்ச்சியடைய செய்வதற்காக ஹார்மோன்கள் மற்றும் பிற மருந்துகள் வழங்கப்படும் அதிர்ச்சி தரும் தகவல்கள்  தெரியவந்து உள்ளது. பாலியல் தொழிலுக்கு விரைவில் அனுப்புவதற்காகவே செயற்கை முறையில் உடல் முதிர்ச்சியடைய செய்வது விசாரணையில் தெரிய வந்துள்ளது என பிபிசி தமிழ் செய்தி வெளியிட்டு உள்ளது.

நேபாளைச் சேர்ந்த சுமார் 29 மில்லியன் பேர் வளைகுடா நாடுகள், மலேசியா, தென் கொரியா உள்ளிட்ட நாடுகளில் புலம் பெயர்ந்த தொழிலாளர்களாக பணியாற்றி வருகின்றனர். இவர்களின் மூலம் நேபாளத்துக்கு வரும் பணம் வழியே அந்நாட்டு அரசுக்கு பெரும் வருவாய் கிடைக்கிறது. நேபாளத்தின் மொத்த உள்நாட்டு வருவாயில் 25 சதவீதம்  இதன் வழியாக கிடைக்கிறது.

நேபாளம் மட்டுமின்றி இந்தியா, இலங்கை, வங்கதேசத்திலிருந்து வளைகுடா நாடுகளுக்கு பணிப்பெண்களாக அழைத்துச் செல்லப்படுபவர்கள் சம்பள பிரச்னை, உடல் ரீதியான சித்ரவதைகளை எதிர்கொள்வதாக குற்றச்சாட்டுகள் ஏற்கனவே உள்ள நிலையில் நேபாள நாடாளுன்றக் குழுவும் இவ்வாறான குற்றச்சாட்டினை வைத்துள்ளது.

இதை தொடர்ந்து காவல் துறையினரும், ஆள் கடத்தலுக்கு எதிராக செயல்படும் அமைப்பினரும் இந்திய-நேபாள எல்லையில் கண்காணிப்பை அதிகரித்துள்ளனர். பல சோதனைச் சாவடிகளும் அமைக்கப்பட்டிருக்கின்றன.

இதனால் பெண்களை கடத்துவதற்கு பதிலாக சிறுமிகளை கடத்துகிறார்கள் என்று சொல்கிறார். கடத்தலுக்கு எதிராக போராடும் அரசு அமைப்பான ' மைதி நேபாள்'- இன் இயக்குநர் பிஷ்வரம் கட்கா.

"இளம் பெண்களை கடத்தினால் கடத்தலை சுலபமாக கண்டுபிடித்து விடமுடியும். ஆனால் குடும்பத்துடன் வரும் சிறுமிகள் என்றால் சந்தேகம் வராது என்பதால் சிறுமிகளை கடத்துவது அதிகரித்துவிட்டது. எனவே பெண் குழந்தைகளை நன்றாக பார்த்துக் கொள்கிறோம், படிக்க வைக்கிறோம் என்று ஏழை பெற்றோர்களிடம் சொல்லி அழைத்து வந்து, சிறுமிகளை சுலபமாக கடத்துகின்றனர். எல்லைப் பகுதியை கடக்கும்போது விசாரிக்கப்பட்டால், தங்கள் குழந்தை என்று சொல்லி தப்பித்துக் கொள்வார்கள்" என்கிறார் கட்கா.

கடத்தல்காரர்கள் ஏழை குடும்பத்து சிறுமிகள் மற்றும் பின்தங்கிய மற்றும் வளர்ச்சியடையாத பகுதிகளில் இருக்கும் பெண் குழந்தைகளை இலக்கு வைக்கின்றனர். குழந்தையை நன்றாக வளர்ப்போம், படிக்க வைக்கிறோம் என்ற ஆசை வார்த்தைகளுக்கு ஏழைப் பெற்றோரின் பெண் குழந்தைகள் பலியாகின்றனர் என்று சொல்கிறார் கட்கா.

உடல் வளர்ச்சியை துரிதப்படுத்துவதற்காக ஹார்மோன்கள் கொடுக்கப்பட்ட சிறுமிகளை தான் சந்தித்திருப்பதாக, கடத்தப்படும் பெண்களின் நலனுக்காக பணிபுரியும் 'சக்தி சமுஹ்' என்ற அமைப்பின் அமைப்பாளர் மற்றும் இயக்குநர் சுனிதா தானுவார் கூறுகிறார்.

பொதுவாக, 9 முதல் 12 வயது சிறுமிகளுக்கு ஹார்மோன் மருந்துகள் கொடுப்பார்கள். மருத்துவர்களின் கருத்துப்படி, ஹார்மோன் மருந்துகள் கொடுக்கப்படும் சிறுமிகளின் மார்புகளும், பிட்டங்களும் பெரிதாகி, இளம் பெண்ணாக தோற்றமளிப்பார்கள் என்று சொல்கிறார் சுனிதா தானுவார்.

நேபாள போலீஸாரின் புள்ளி விபரங்களின்படி, மனித கடத்தல் தற்போது அதிகரித்துள்ளது. 181 ஆக இருந்த கடத்தல் புகார்கள் கடந்த நான்கு ஆண்டுகளில் 268 ஆக உயர்ந்துவிட்டது. புகார் கொடுத்தவர்களில் 80 சதவிகிதம் பெண்கள்.

ஆனால் குழந்தைகள் கடத்தப்பட்டதாக நேபாள போலீசாருக்கு புகார்கள் வருவதில்லை என்று அவர் கூறுகிறார். சிறுமிகளை கடத்தியதாகவோ, உடல் உறுப்புகள் துரிதமாக வளர்வதற்காக அவர்களுக்கு ஹார்மோன் மருந்துகள் கொடுக்கபப்ட்டதாகவோ எங்களுக்கு புகார்கள் எதுவும் வரவில்லை" என்று போலீஸ் அதிகாரி தெரிவித்து உள்ளார்.

அண்மை ஆண்டுகளில் கடத்தலின் வழிமுறைகள் மாறிவிட்டன. அரசும் கடத்தலை தடுப்பதற்கான முயற்சிகளை பல்வேறு கோணங்களில் சிந்தித்து மேற்கொண்டு வருகிறது.

புதிய சட்டங்களையும், கொள்கைகளையும் இயற்றுவதன் மூலம் மட்டும் கடத்தலை தடுக்க முடியாது. பயனுள்ள விழிப்புணர்வு திட்டங்கள் தேவை. விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நாடு முழுவதும் நடத்தப்பட வேண்டும் என்பது செயற்பாட்டாளர்களின் கோரிக்கை.

Next Story