சிறையில் அடைக்கப்பட்டுள்ள நவாஸ் ஷெரீப்புக்கு சிறுநீரக கோளாறு


சிறையில் அடைக்கப்பட்டுள்ள நவாஸ் ஷெரீப்புக்கு சிறுநீரக கோளாறு
x
தினத்தந்தி 23 July 2018 10:45 PM GMT (Updated: 23 July 2018 9:57 PM GMT)

சிறையில் அடைக்கப்பட்டுள்ள நவாஸ் ஷெரீப்புக்கு சிறுநீரக கோளாறு காரணமாக மருத்துவமனையில் சேர்க்க டாக்டர்கள் பரிந்துரை செய்துள்ளனர்.

இஸ்லாமாபாத்,

ஊழல் வழக்கு ஒன்றில் 10 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப், கடந்த 13-ந் தேதி முதல் ராவல்பிண்டியில் உள்ள அடியலா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். அவருக்கு கடந்த 21-ந் தேதி உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து அவரது உடலை பரிசோதிக்க, ராவல்பிண்டி மருத்துவமனையை சேர்ந்த டாக்டர் குழு ஒன்றை சிறை நிர்வாகம் நேற்று வரவழைத்தது. டாக்டர் அசார் மெக்முத் கியானி தலைமையிலான இந்த குழுவினர் சுமார் 1½ மணிநேரம் நவாஸ் ஷெரீப்பின் உடல் நிலையை பரிசோதித்தனர்.

இதில் அவரது சிறுநீரகம் ஒன்று செயலிழக்கும் நிலையில் இருப்பது கண்டறியப்பட்டது. மேலும் உடலில் நீர்ச்சத்து குறைந்துள்ளதால் இதயத்துடிப்பும் சீரற்று இருப்பதாக கண்டறிந்த டாக்டர்கள், உடனே அவரை மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்க வேண்டும் என சிறை நிர்வாகத்துக்கு பரிந்துரைத்தனர்.

இது குறித்து பஞ்சாப் மாகாண அரசுக்கு சிறை நிர்வாகம் தகவல் கொடுத்தது. இந்த விவகாரத்தில் மாகாண உள்துறை அமைச்சகத்தின் உத்தரவுக்காக காத்திருப்பதாக சிறை வட்டாரங்கள் தெரிவித்தன.

இதற்கிடையே இந்த வழக்கில் சிறைத்தண்டனை அனுபவித்து வரும் நவாசின் மருமகன் முகமது சப்தாரும், காது மற்றும் தொண்டை தொற்றால் அவதிப்பட்டு வருகிறார். அவருக்கும் மாவட்ட தலைமை மருத்துவமனையை சேர்ந்த டாக்டர்கள் நேற்று மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண்டனர்.

Next Story