பாகிஸ்தானில் நாளை பொதுத்தேர்தல்: நாடு முழுவதும் உச்ச கட்ட பாதுகாப்பு பணியில் ராணுவம்


பாகிஸ்தானில் நாளை பொதுத்தேர்தல்: நாடு முழுவதும் உச்ச கட்ட பாதுகாப்பு பணியில் ராணுவம்
x
தினத்தந்தி 24 July 2018 9:47 AM GMT (Updated: 24 July 2018 9:47 AM GMT)

பாகிஸ்தானில் நாளை பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், நாடு முழுவதும் உச்ச கட்ட பாதுகாப்பு பணியில் ராணுவம் ஈடுபட்டுள்ளது.

இஸ்லமபாத்,

பாகிஸ்தானில் நாளை (புதன்கிழமை) நாடாளுமன்ற தேர்தலும், பஞ்சாப், சிந்து, கைபர் பக்துங்வா, பலுசிஸ்தான் மாகாண சட்டசபை தேர்தலும் நடக்கிறது.
இந்த தேர்தலில் இதுவரை இல்லாத அளவுக்கு வன்முறை சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. 

தேர்தல் பிரசாரத்தின்போது முன்னாள் கிரிக்கெட் வீரரும், பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சியின் தலைவருமான இம்ரான்கான், அவாமி தேசிய கட்சி தலைவர்கள் அஸ்பந்தியர் வாலி, அமீர் ஹைதர் ஹோட்டி, காமி வதான் கட்சி தலைவர் அப்தாப் ஷெர்பாவ், ஜாமியத் உலமா இ இஸ்லாம் பாசில் தலைவர் அக்ரம் கான் துர்ரானி, மும்பை தாக்குதல் பயங்கரவாதி ஹபீஸ் சயீத்தின் மகன் டால்ஹா சயீத் ஆகியோருடைய உயிருக்கு ஆபத்து உள்ளதாக ஏற்கனவே தேசிய பயங்கரவாத தடுப்பு ஆணையம் எச்சரிக்கை விடுத்தது.

இதனால், நாளை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் நாடு முழுவதும் ராணுவம் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளது. மொத்தம் உள்ள 85 ஆயிரம் வாக்குச்சசாவடிகளிலும் 3 லட்சத்து 70 ஆயிரம் வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர் என்று ராணுவம் தெரிவித்துள்ளது. ஆனால், அளவுக்கு அதிகமாக தனது பலத்தை ராணுவம் பிரயோகப்படுத்துவதாக அந்நாட்டில் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. வாக்குச்சாவடிக்கும் உள்ளேயும் வெளியேயும் ராணுவத்தை நிறுத்துவதற்கு பாகிஸ்தான் தேர்தல் ஆணையமும் அதிருப்தி தெரிவித்து உள்ளது. 

பாகிஸ்தான், 1947 ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்ற பிறகு அதன் அரசியல் வரலாற்றில் பாதிக்கும் மேலாக ஆட்சி அதிகாரத்தை, ராணுவ புரட்சி மூலம் ராணுவமே நடத்தியுள்ளது கவனிக்கத்தக்கது. 


Next Story