நவாஸ் ஷெரீப் ஆஸ்பத்திரியில் சேர்ந்து சிகிச்சை பெற மறுப்பு


நவாஸ் ஷெரீப் ஆஸ்பத்திரியில் சேர்ந்து சிகிச்சை பெற மறுப்பு
x
தினத்தந்தி 24 July 2018 10:30 PM GMT (Updated: 24 July 2018 9:02 PM GMT)

சிறையில் அடைக்கப்பட்டு உள்ள பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் ஆஸ்பத்திரியில் சேர்ந்து சிகிச்சை பெற மறுப்பு தெரிவித்துள்ளார்.

இஸ்லாபாத்,

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப், ஊழல் பணத்தில் லண்டன் நகரில் ‘அவென்பீல்டு’ சொகுசு வீடுகள் வாங்கி குவித்த வழக்கில் 10 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு, ராவல்பிண்டி அடியலா சிறையில் அடைக்கப்பட்டார்.

அவர் இதய நோயாளி ஆவார். சர்க்கரை நோயும் தாக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் அவர் நீர்ப்போக்கு பிரச்சினையால் கடும் அவதிக்கு ஆளாகி உள்ளார். அவரை நேற்று முன்தினம் ‘பிம்ஸ்’ என்று அழைக்கப்படுகிற பாகிஸ்தான் மருத்துவ அறிவியல் கல்லூரி மருத்துவர்கள் குழுவினர் பரிசோதித்தனர்.

இதுபற்றி பரிசோதனை குழுவில் இடம் பெற்றிருந்த ஒரு டாக்டர் கூறும்போது, ‘‘அவரது ரத்தத்தில் யூரியாவின் அளவு கிட்டத்தட்ட 50 சதவீதம் அதிகமாக இருப்பது தெரியவந்தது. நீர்ப்போக்கு பிரச்சினையும் கடுமையாக உள்ளது. இ.சி.ஜி. பரிசோதனையும் செய்யப்பட்டது. அவரது கடந்த கால பிரச்சினைகளும் கேட்டு கவனத்தில் கொள்ளப்பட்டன. அவர் ஏற்கனவே எடுத்து வருகிற மாத்திரை, மருந்துகளை தொடருமாறு அறிவுறுத்தப்பட்டார்’’ என்று குறிப்பிட்டார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமையன்றும் 2 மருத்துவர்களை கொண்ட குழு நவாஸ் ஷெரீப்பை பரிசோதித்து, அவரை ஆஸ்பத்திரியில் சேர்ந்து, தொடர்ந்து சிகிச்சை செய்துகொள்ளுமாறு பரிந்துரை செய்ததாகவும், அவர் அதை ஏற்க மறுத்துவிட்டதாகவும், சிறையிலேயே சிகிச்சை பெறுகிறேன் என கூறி விட்டதாகவும் தகவல் அறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

இது குறித்து ஓய்வு பெற்ற ராணுவ டாக்டர் அசார் முகமது கியானி கருத்து தெரிவிக்கையில், ‘‘அவரது இதயத்துடிப்பு இயல்பாக இல்லை என்பதாலும், ரத்தத்தில் யூரியாவின் அளவு அதிகமாக இருப்பதால் சிறுநீரகத்தை பாதிக்கலாம் என்பதாலும் ஆஸ்பத்திரியில் சேர்ந்து சிகிச்சை பெறுமாறு சிறை நிர்வாகமும், தற்காலிக அரசும் பரிந்துரை செய்தன’’ என கூறினார்.

Next Story