பாகிஸ்தானில் குவெட்டா நகரில் வாக்கு சாவடிக்கு வெளியே குண்டுவெடிப்பு: 25 பேர் பலி; 40 பேர் படுகாயம்


பாகிஸ்தானில் குவெட்டா நகரில் வாக்கு சாவடிக்கு வெளியே குண்டுவெடிப்பு:  25 பேர் பலி; 40 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 25 July 2018 7:24 AM GMT (Updated: 25 July 2018 7:24 AM GMT)

பாகிஸ்தானில் குவெட்டா நகரில் வாக்கு சாவடிக்கு வெளியே நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் 25 பேர் பலியாகி உள்ளனர். 40 பேர் படுகாயம் அடைந்தனர்.

குவெட்டா,

பாகிஸ்தானில் 272 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு தேர்தல் மூலம் உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க இன்று தேர்தல் நடக்கிறது. அத்துடன் பஞ்சாப், சிந்து, பலுசிஸ்தான், கைபர்பக்துக்வா ஆகிய 4 மாகாண சட்டசபைகளுக்கும் சேர்த்து தேர்தல் நடத்தப்படுகிறது. நாடு முழுவதும் மொத்தம் 10 கோடியே 59 லட்சம் பேர் வாக்காளர்கள் உள்ளனர்.

இதில் நாடாளுமன்ற தொகுதிகளுக்கு 3,459 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 577 மாகாண சட்டசபை தொகுதிகளுக்கு 8,396 வேட்பாளர்கள் களம் காண்கின்றனர். 

ஓட்டு பதிவிற்காக நாடு முழுவதும் 89 ஆயிரம் வாக்கு சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன.  இந்த நிலையில், நாடாளுமன்றம் மற்றும் மாகாண தேர்தல்களுக்கான வாக்கு பதிவு இன்று காலை பலத்த பாதுகாப்புடன் தொடங்கியது.

இந்த தேர்தலில் லாஹூர் நகரில் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சியின் தலைவர் ஷபாஸ் ஷெரீப் தனது வாக்கினை பதிவு செய்வதற்காக மாடல்டவுன் பகுதியில் உள்ள வாக்கு சாவடியில் வரிசையில் நின்று பின்னர் வாக்களித்து சென்றார்.

இதேபோன்று முன்னாள் பிரதமரான பெனாசீர் பூட்டோவின் இரு மகள்களான பக்தவார் மற்றும் ஆசீபா ஆகியோர் சிந்து மாகாணத்தின் நவாப்ஷா பகுதியில் வாக்களித்தனர்.

தேர்தலை முன்னிட்டு இன்று அந்நாடு முழுவதும் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த தேர்தலில் வாக்கு பதிவு நடைபெறும் இடங்களில் பாதுகாப்பு பணிகளுக்காக 4 லட்சத்து 49 ஆயிரத்து 465 போலீசாரும் மற்றும் 3 லட்சத்து 70 ஆயிரம் ராணுவ வீரர்களும் குவிக்கப்பட்டு உள்ளனர்.

இந்த நிலையில், அந்நாட்டின் பலுசிஸ்தான் மாகாணத்தின் குவெட்டா நகரில் இன்று குண்டுவெடிப்பு நடந்துள்ளது.  இந்த தாக்குதலில் 25 பேர் கொல்லப்பட்டனர்.  40 பேர் படுகாயமடைந்து உள்ளனர்.  தேர்தலுக்கு முன் பிரசாரம் மற்றும் பேரணியின்பொழுது முக்கிய தலைவர்களை இலக்காக கொண்டு நடந்த தாக்குதல்களில் 180 பேர் வரை பலியாகி இருந்தனர்.


Next Story