செவ்வாய் கிரகத்தில் மிகப்பெரிய ஏரி கண்டுபிடிப்பு


செவ்வாய் கிரகத்தில் மிகப்பெரிய ஏரி கண்டுபிடிப்பு
x
தினத்தந்தி 25 July 2018 11:15 PM GMT (Updated: 25 July 2018 7:55 PM GMT)

செவ்வாய் கிரகத்தில், தண்ணீர் இருப்பதற்கான அறிகுறியை தெரிந்து கொள்வதில் உலகம் முழுவதும் விஞ்ஞானிகள் ஆர்வமாக உள்ளனர்.

வாஷிங்டன்,

செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் உயிர் வாழ முடியுமா என்பதை அறிய இது மிகவும் முக்கியம் ஆகும். இந்நிலையில், செவ்வாய் கிரகத்தில், முதல் முறையாக மிகப்பெரிய ஏரி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2003–ம் ஆண்டு ஐரோப்பிய விண்வெளி ஆய்வு அமைப்பின் விண்கலம் செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பப்பட்டது. அதில் உள்ள ராடார் சாதனங்கள், இந்த அரிய கண்டுபிடிப்பை நிகழ்த்தி உள்ளன. இதுபற்றி இத்தாலி ஆராய்ச்சியாளர்கள் எழுதிய ஆய்வறிக்கை, அமெரிக்க விஞ்ஞான பத்திரிகையில் வெளியிடப்பட்டுள்ளது. இதுவரை, செவ்வாய் கிரகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட நீர் ஆதாரங்களில் இதுதான் மிகப்பெரியது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால், அதில் உள்ள நீரை குடிக்க முடியாது. ஏனென்றால், பனி படர்ந்த மேற்பரப்புக்கு அடியில் ஒன்றரை கி.மீ. ஆழத்தில் அந்த ஏரி அமைந்துள்ளது. சுமார் 20 கி.மீ. அகலத்தில் ஏரி உள்ளது. செவ்வாய் கிரகத்தின் தென்துருவத்தில் ஏரி இருப்பதால், செவ்வாய் கிரகத்தின் மற்ற பகுதிகளிலும் நீர் இருப்பதற்கும், உயிரினங்கள் உயிர் வாழ்வதற்கும் வாய்ப்பு அதிகமாக உள்ளது.

அங்கு நுண்ணுயிர்கள் உயிர் வாழக்கூடும் என்ற விவாதத்தையும் இது உருவாக்கி உள்ளது.

செவ்வாய் கிரகத்தில் மிகப்பெரிய ஏரி கண்டுபிடிக்கப்பட்டதற்கு விஞ்ஞானிகள் பலர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். அதே சமயத்தில், இன்னொரு விண்கலத்தை அனுப்பி, இந்த கண்டுபிடிப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்று மற்றொரு சாரார் கூறியுள்ளனர்.


Next Story