பாகிஸ்தான் தேர்தலில் ஓட்டு எண்ணிக்கை இம்ரான் கான் கட்சி கூடுதல் இடங்களில் வெற்றி


பாகிஸ்தான் தேர்தலில் ஓட்டு எண்ணிக்கை இம்ரான் கான் கட்சி கூடுதல் இடங்களில் வெற்றி
x
தினத்தந்தி 25 July 2018 11:45 PM GMT (Updated: 25 July 2018 8:06 PM GMT)

பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தலில் இம்ரான் கான் கட்சி கூடுதலான இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதே நிலைமை நீடித்தால், இம்ரான் கான் கட்சி ஆட்சி அமைக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

கராச்சி,

பாகிஸ்தானில் நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சியின் 5 ஆண்டுகால ஆட்சி கடந்த மே மாதம் முடிவடைந்தது. இதையடுத்து 272 உறுப்பினர்களைக் கொண்ட பாகிஸ்தான் நாடாளுமன்றத்துக்கு நேற்று தேர்தல் நடந்தது. அதேபோல் அங்குள்ள பஞ்சாப், சிந்து, பலுசிஸ்தான், கைபர்–பக்துங்க்வா ஆகிய 4 மாகாண சட்டசபைகளுக்கும் தேர்தல் நடத்தப்பட்டது. நாடாளுமன்ற தேர்தலில் 30–க்கும் மேற்பட்ட கட்சிகள் 3,459 வேட்பாளர்களை நிறுத்தின.

எனினும் ஆட்சியை கைப்பற்றுவதில் ஊழல் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக், பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கானின் தெஹ்ரீக் இ–இன்சாப், மறைந்த பிரதமர் பெனாசிர் பூட்டோவின் மகன் பிலாவல் பூட்டோ தலைமையேற்றுள்ள பாகிஸ்தான் மக்கள் கட்சி ஆகியவற்றுக்கு இடையேதான் கடும் போட்டி உள்ளது.

நேற்று மாலை 6 மணிக்கு ஓட்டுப்பதிவு முடிந்த உடனேயே ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது.

230 தொகுதிகளுக்கான ஓட்டுகளை எண்ணியபோது இம்ரான் கானின் தெஹ்ரீக்–இ–இன்சாப் கட்சி 90 இடங்களிலும், நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் 52 இடங்களிலும், பிலாவல் பூட்டோவின் பாகிஸ்தான் மக்கள் கட்சி 30 இடங்களிலும் முன்னிலையில் இருந்தன.

இதர கட்சி வேட்பாளர்கள் 52 இடங்களில் கூடுதல் ஓட்டு வாங்கி இருந்தனர்.

இதே நிலைமை நீடித்தால், இம்ரான் கான் கட்சி ஆட்சி அமைக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

முன்னதாக நாடாளுமன்ற மற்றும் மாகாண சட்டசபை தேர்தலுக்காக நாடு முழுவதும் 85 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தன. பாகிஸ்தானில் மொத்த வாக்காளர்கள் 10 கோடியே 60 லட்சம் ஆகும்.

தேர்தலின்போது அசம்பாவித சம்பவங்கள் நடக்கலாம் என்பதால் போலீசும், ராணுவமும் முக்கிய பகுதிகளிலும், பதற்றம் நிறைந்த வாக்குச் சாவடிகளிலும் பெரும் அளவில் குவிக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு போடப்பட்டது.

கலவரம் வெடிக்கலாம் என்று கருதப்பட்ட பெஷாவர் நகரில் ஆளில்லாத குட்டி விமானங்கள் மூலம் வாக்குச் சாவடிகள் கண்காணிக்கப்பட்டன.

இந்த நிலையில் நேற்று காலை 8 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கியது. ஆனால் வாக்குப்பதிவு தொடங்கிய உடனேயே நாடு முழுவதும் ஆங்காங்கே வன்முறையும் சேர்ந்தே தலைதூக்கியது.

ஓட்டுப்பதிவு விறுவிறுப்பாக நடந்து கொண்டிருந்த நேரத்தில், பலுசிஸ்தான் மாகாணம் குவெட்டா நகரில் போசா மண்டி என்னும் பகுதியில் உள்ள ஒரு வாக்குச்சாவடிக்கு ஒருவர் வேக வேகமாக வந்தார். அவர் மீது சந்தேகம் அடைந்த போலீசார் அவரை ஓட்டுப்போட அனுமதிக்காமல் தடுத்து நிறுத்தினர்.

அப்போது அந்த மர்ம நபர் தனது உடலில் கட்டிக்கொண்டு வந்திருந்த குண்டுகளை வெடிக்கச் செய்தார். இதில் சம்பவ இடத்திலேயே 5 போலீசாரும், பொதுமக்களில் 26 பேரும் உடல் சிதறி உயிர் இழந்தனர். மேலும் 60 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாத இயக்கம் பொறுப்பு ஏற்றுள்ளது.

இதேபோல் கைபர்–பக்துங்க்வா மாகாணத்தின் சுவாபி மாவட்டத்தில் இரு கட்சிகளுக்கு இடையே ஒரு வாக்குச்சாவடி அருகே பயங்கர மோதல் ஏற்பட்டது. அப்போது இருதரப்பினரும் ஒருவரையொருவர் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டுக்கொண்டனர். இதில் இம்ரான் கான் கட்சி தொண்டர் ஒருவர் பலியானார். மேலும் மூவர் படுகாயம் அடைந்தனர்.

17–வது நாடாளுமன்ற தொகுதியான சுவாபி–2–ல் உள்ள நவான் காளி என்னுமிடம் இடத்தில் வாக்குச் சாவடிக்கு வெளியே அவாமி லீக் கட்சியினர் துப்பாக்கியால் சுட்டதில் பி.டி.ஐ. கட்சி தொண்டர் ஒருவர் பரிதாபமாக உயிர் இழந்தார்.

219–வது நாடாளுமன்ற தொகுதியின் திக்ரி பகுதியில் ஒரு ஓட்டுச் சாவடிக்கு வெளியே நடந்த துப்பாக்கி சூட்டில் இன்னொருவர் உயிர் இழந்தார். கனேவால் என்ற இடத்தில் நடந்த கைகலப்பில் நவாஸ் ஷெரீப் கட்சி தொண்டர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டார்.

லர்கானா நகரில் ஒரு அரசியல் கட்சியினரின் அலுவலகம் அருகே பட்டாசுகள் வெடித்துச் சிதறியதில் 4 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவங்களில் மொத்தம் 35 பேர் கொல்லப்பட்டனர். 67 பேர் படுகாயம் அடைந்தனர்.

இந்த களேபரங்களுக்கு இடையேயும் நாடு முழுவதும் ஓட்டுப்பதிவு விறுவிறுப்பாக நடந்தது. கராச்சி, குவெட்டா, பெஷாவர் நகரங்களில் வாக்குச் சாவடிகளில் ஆண்களும், பெண்களும் நீண்ட வரிசையில் காத்திருந்து ஆர்வத்துடன் ஓட்டுப் போட்டனர்.

இஸ்லாமாபாத் தொகுதியில் வாக்களித்த இம்ரான் கான், தான் யாருக்கு ஓட்டுப்போட்டோம் என்பதை வாக்காளர்களுக்கு தெரிவிக்கும் வகையில் வாக்குச் சீட்டை வெளிப்படையாக காண்பித்தார். இது தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறிய செயல் என்று புகார் எழுந்தது.

இதையடுத்து வருகிற 30–ந் தேதி தேர்தல் கமி‌ஷன் முன்பு ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி பாகிஸ்தான் தேர்தல் கமி‌ஷன் அவருக்கு உத்தரவிட்டது.


Next Story