இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நில நடுக்கம் இடிபாடுகளில் சிக்கி 15 பேர் பலி


இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நில நடுக்கம் இடிபாடுகளில் சிக்கி 15 பேர் பலி
x
தினத்தந்தி 29 July 2018 10:45 PM GMT (Updated: 29 July 2018 7:59 PM GMT)

இந்தோனேசியாவில் உள்ள லம்பாக் தீவில் சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட இடிபாடுகளில் சிக்கி 15 பேர் பலியாகினர்.

ஜகார்த்தா,

புவித்தட்டுகள் அடிக்கடி நகர்கிற இடத்தில் இந்தோனேசியா அமைந்து உள்ளதால் அங்கு அடிக்கடி நில நடுக்கம் ஏற்படுகிறது.

அந்த வகையில், அங்கு சுற்றுலாப்பயணிகளின் சொர்க்கமாக திகழ்கிற லம்பாக் தீவில் நேற்று காலையில் சக்திவாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது. இந்த நில நடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.4 புள்ளிகளாக பதிவானது. மாதரம் என்ற நகரத்தில் இருந்து 50 கி.மீ. தொலைவில் 7 கி.மீ. ஆழத்தில் இந்த நில நடுக்கம் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆராய்ச்சி அமைப்பு தெரிவித்தது.

நில நடுக்கம் ஏற்பட்டபோது, தூங்கிக்கொண்டு இருந்த மக்கள் பதறியடித்துக்கொண்டு பீதியுடன் வீதிகளுக்கு ஓடி வந்தனர். பலர் திறந்தவெளிகளுக்கும், மைதானங்களுக்கும் பதற்றத்துடன், அலறியடித்துக்கொண்டு ஓடினர்.

செம்பலூன் என்ற நகரம்தான் அதிக பாதிப்புக்கு உள்ளானது. அங்கு மின்சாரம் தடைபட்டது. ஏராளமான வீடுகள் இருளில் தவித்தன. பல கட்டிடங்கள் இடிந்து தரை மட்டமாகின. ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து சேதம் அடைந்தன.

இடிபாடுகளில் சிக்கி 15 பேர் உயிரிழந்தனர், சுமார் 160 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது.

உடனடியாக மீட்பு பணிகளும், நிவாரணப் பணிகளும் முடுக்கி விடப்பட்டன.

இதுபற்றி பேரிடர் மேலாண்மை முகமையின் செய்தி தொடர்பாளர் சுட்டோபோ புர்வோ நுக்ரஹோ கூறும்போது, ‘‘இந்த நில நடுக்கத்தில் பலியானவர்களில் ரிஞ்சனி மலையில் மலையேறும் பயிற்சிக்காக வந்து இருந்த மலேசியாவை சேர்ந்த 30 வயது பெண் ஒருவரும் அடங்குவார். அந்த மலைப்பகுதியில் பெரும் நிலச்சரிவுகள் ஏற்பட்டதாக தகவல்கள் வந்து உள்ளன. அந்தப் பகுதிக்கு இப்போது யாரும் அனுமதிக்கப்படவில்லை’’ என்று குறிப்பிட்டார்.

செம்பலூன் நகரில் பல இடங்களில் பொதுமக்களுக்காக தற்காலிக கூடாரங்கள் அமைக்கப்பட்டு உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அத்துடன், ‘‘இப்போது மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் கவனம் செலுத்தத் தொடங்கி உள்ளோம். படுகாயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு, மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது’’ என்றும் அவர் தெரிவித்தார்.

அத்துடன் நில நடுக்கத்தில் தரை மட்டமான கட்டிடங்களின் படங்களை அவர் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டார்.

நில நடுக்கத்தில் தப்பிய சிதி சுமர்னி என்பவர் கூறும்போது, ‘‘காலை 6 மணிக்கு திடீரென நில நடுக்கம் ஏற்பட்டது. உடனடியாக கட்டிடங்கள் இடிந்து சரியத்தொடங்கின. என் மகன் வீட்டுக்குள் அகப்பட்டு கொண்டான். ஆனால் நல்ல வேளையாக காயம் இன்றி தப்பினான்’’ என்று குறிப்பிட்டார்.

லம்பாக்கில் ஓட்டல் நடத்தி வரும் ஜீன்பால் வோல்காயர்ட் என்பவர் நில நடுக்க பாதிப்பு குறித்து குறிப்பிடும்போது, ‘‘எங்கள் தலையில் எதுவும் இடிந்து விழுந்து விடக்கூடாது என்பதற்காக நாங்கள் படுக்கையில் இருந்து எழுந்து ஓடினோம்’’ என கூறினார்.

இந்த நில நடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக தகவல் இல்லை.


Next Story