உலக செய்திகள்

முன் நிபந்தனைகள் எதுவுமின்றி ‘ஈரான் அதிபரை சந்தித்து பேசத்தயார்’ டிரம்ப் அறிவிப்பு + "||" + Without preliminary conditions, the 'Trump Announcement' met with the President of Iran

முன் நிபந்தனைகள் எதுவுமின்றி ‘ஈரான் அதிபரை சந்தித்து பேசத்தயார்’ டிரம்ப் அறிவிப்பு

முன் நிபந்தனைகள் எதுவுமின்றி ‘ஈரான் அதிபரை சந்தித்து பேசத்தயார்’ டிரம்ப் அறிவிப்பு
முன் நிபந்தனைகள் எதுவுமின்றி ஈரான் அதிபர் ஹசன் ரூஹானியை சந்தித்து பேசத்தயார் என்று அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவித்தார்.
வாஷிங்டன், 


ஈரானுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே பனிப்போர் மூண்டு உள்ளது.

அமெரிக்காவில் ஒபாமா ஜனாதிபதியாக இருந்தபோது 2015-ல் அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷியா, பிரான்ஸ், சீனா மற்றும் ஜெர்மனியுடன் ஈரான் வரலாற்று சிறப்பு வாய்ந்த அணு ஆயுத தவிர்ப்பு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டது. முழுமையான கூட்டு செயல் திட்டம் என்ற பெயரில் போடப்பட்ட இந்த ஒப்பந்தம், அதே ஆண்டு அக்டோபர் மாதம் 18-ந் தேதி அமலுக்கு வந்தது.

ஈரான் அணு ஆயுத திட்டங்களை செயல்படுத்துவதை கைவிடவும், அதற்கு பதிலாக அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் அந்த நாட்டின் மீது விதித்த பொருளாதார தடைகளை படிப்படியாக திரும்பப்பெறவும் அந்த ஒப்பந்தம் வழி செய்தது.

ஆனால் இந்த ஒப்பந்தம் அமெரிக்க நலன்களுக்கு எதிரானது என்று கூறி, கடந்த மே மாதம் அதில் இருந்து அமெரிக்கா வெளியேறிவிட்டது. அதுமட்டுமின்றி ஈரான் மீதான பொருளாதார தடைகள் தொடரும் என்றும் டிரம்ப் அறிவித்தார்.

இது தொடர்பாக நெதர்லாந்து நாட்டில் திஹேக் நகரில் உள்ள சர்வதேச கோர்ட்டில் அமெரிக்கா மீது ஈரான் வழக்கு தொடுத்து உள்ளது.

இதற்கு மத்தியில் இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் அச்சுறுத்தும் வகையில் வார்த்தை யுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பரம எதிரியாக திகழ்ந்த வடகொரியாவின் அதிபர் கிம் ஜாங் அன்னை அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கடந்த ஜூன் மாதம் 12-ந் தேதி சிங்கப்பூரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். கொரிய தீபகற்பத்தில் அணு ஆயுத கைவிடலுக்கு ஆதரவாக இருதரப்பிலும் ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த சந்திப்பால், இரு தரப்பும் நிலவிவந்த போர் மேகங்கள் விலகி உள்ளன.

இதே போன்று இப்போது ஈரான் அதிபர் ஹசன் ரூஹானியையும் சந்தித்து பேசத்தயார் என அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அதிரடியாக அறிவித்து உலக அரங்கை அதிர வைத்து உள்ளார்.

வாஷிங்டன் சென்று உள்ள இத்தாலி பிரதமர் கியுசெப்பே கொண்டேயுடன் டிரம்ப் நேற்று முன்தினம் நிருபர்களை சந்தித்தபோது, இதுபற்றி கூறியதாவது:-

எனக்கு சந்திப்புகளில் நம்பிக்கை உண்டு. நிச்சயமாக ஈரான் (அதிபர் ஹசன் ரூஹானி) என்னை சந்திக்க வேண்டும் என்று விரும்பினால், நான் சந்திக்க தயாராக இருக்கிறேன். அவர்கள் இப்போது தயாராக இருக்கிறார்களா என்பது பற்றி எனக்கு தெரியாது. அவர்கள் கடினமான தருணத்தில் உள்ளனர். ஈரான் உடனான ஒப்பந்தம் கேலிக்கூத்தான ஒன்று என்பதால் அதை முடிவுக்கு கொண்டு வந்தேன். அவர்கள் என்னை சந்திக்க விரும்பலாம். அவர்கள் விரும்புகிற தருணத்தில் நான் சந்தித்து பேசுவதற்கு தயாராக இருக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

இது தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு அவர் பதில் அளிக்கையில், “முன் நிபந்தனைகள் எதுவும் இல்லை. அவர்கள் சந்திக்க விரும்பினால், எப்போது வேண்டுமானாலும் சந்திக்க தயார். இது நாட்டுக்கு நல்லது, அவர்களுக்கு நல்லது. உலகத்துக்கு நல்லது. எந்த முன் நிபந்தனைகளும் கிடையாது” என்று கூறினார்.

தொடர்ந்து அவர் கூறும்போது, “ஈரானில் உள்ள மிருகத்தனமான அரசு, அணு ஆயுதங்களை ஒரு போதும் வைத்துக்கொண்டு இருக்கக்கூடாது என்று நானும் இத்தாலி பிரதமரும் ஒப்புக்கொண்டோம். ஈரான் தனது தவறான நடவடிக்கைகளை கைவிட வேண்டும்” என்றும் குறிப்பிட்டார்.

இது குறித்து ஈரான் உடனடியாக பதில் அளித்தது. அந்த நாட்டின் அதிபர் ஹசன் ரூஹானியின் ஆலோசகர் ஹமித் அபுவுட்டாலெபி கூறுகையில், “ஈரான் நாட்டின் உரிமைகளை மதித்து, பகைமையை குறைத்துக்கொண்டு, மீண்டும் அணு ஒப்பந்தத்தை அமெரிக்கா ஏற்றுக்கொள்வது இருதரப்பு பேச்சுவார்த்தைக்கு வழிநடத்தும்” என குறிப்பிட்டார்.

ஆனால் இதற்கு அமெரிக்கா இணங்குமா என்பது கேள்விக்குறி.