இம்ரான்கானே பிரதமராக பதவியேற்பார் : தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி அதிகாரப்பூர்வ அறிவிப்பு


இம்ரான்கானே பிரதமராக பதவியேற்பார் : தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி அதிகாரப்பூர்வ அறிவிப்பு
x
தினத்தந்தி 6 Aug 2018 10:29 AM GMT (Updated: 6 Aug 2018 10:29 AM GMT)

இம்ரான்கான் பிரதமராக பதவியேற்பார் என்று தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இஸ்லமபாத், 

பாகிஸ்தான் நாடாளுமன்றத்துக்கு கடந்த ஜூலை மாதம் 25–ந் தேதி தேர்தல் நடந்தது. உடனடியாக ஓட்டு எண்ணிக்கை நடைபெற்றது. இந்த தேர்தலில் எந்தவொரு கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான்கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்–இ–இன்சாப் (பி.டி.ஐ.) கட்சி 116 இடங்களை பிடித்து தனிப்பெரும் கட்சியாக வந்து உள்ளது. 

முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சிக்கு (நவாஸ்) 64 இடங்கள் கிடைத்து உள்ளன.  மற்றொரு முன்னாள் பிரதமரான பெனாசிர் பூட்டோவின் பாகிஸ்தான் மக்கள் கட்சி 43 இடங்களுடன் மூன்றாவது இடத்தைப் பிடித்தது.

அந்தவகையில் இந்த தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. எனினும் அதிக இடங்களை பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள பி.டி.ஐ. சார்பில், அதன் தலைவர் இம்ரான்கான் பாகிஸ்தானின் அடுத்த பிரதமராகும் வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது. கூட்டணி அமைத்தால் இம்ரான் கான் பிரதமர் ஆகும் நிலை  உள்ளது.  அதற்கான பேச்சுவார்த்தையும் நடந்துள்ளது. பாகிஸ்தான் அரசியல் சாசனப்படி தேர்தல் நடந்து 21 நாட்களுக்குள் நாடாளுமன்றத்தை ஜனாதிபதி கூட்டி, புதிய உறுப்பினர்கள் பதவி ஏற்க வேண்டும், சபாநாயகர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.  அதன்படி, ஆகஸ்டு 15-ந்தேதிக்குள் அரசு அமைக்கப்பட வேண்டும்.

இம்ரான் கான் தான் பிரதமராக பதவியேற்க உள்ளதாக, தேர்தல் முடிவுகள் வெளியானது முதலே தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், தற்போது வரை அதிகாரப்பூர்வமாக, இம்ரான் கானின் கட்சி சார்பில் அறிவிப்பு வெளியாகாமல் இருந்தது. இந்த நிலையில், முதல் முறையாக தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி,  அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

அதில், இம்ரான் கானே எங்கள் கட்சியின் சார்பில் பிரதமர் பதவிக்கு முன்னிறுத்தப்பட்டுள்ளார் என்று தெரிவித்துள்ளது. இதனால், இம்ரான்கான் பிரதமர் ஆவதற்கான தடைகள் அனைத்தும் ஏறக்குறைய களைந்து போய்விட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள்  கூறுகின்றன. இம்ரான்கான் பிரதமராக பதவியேற்பதற்கான தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்ற போதிலும், வரும் 14 ஆம் தேதி பிரதமர் ஆக பதவியேற்பார் என்று தகவல்கள் கூறுகின்றன. 

பாகிஸ்தானில், நேரடி தேர்ததல் மூலமாக 252 உறுப்பினர்களும் விகிதாச்சார முறைப்படி 70 உறுப்பினர்களும் தேர்வு செய்யப்படுகின்றனர். இரண்டையும் சேர்த்து 172 இடங்களை கைப்பற்றும் கட்சியே பாகிஸ்தானில் ஆட்சி அமைக்க முடியும். இம்ரான்கானின் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சியின் தலைமையிலான கூட்டணி  மொத்தம் 174 இடங்களை கைப்பற்றியுள்ளது. 

Next Story