இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 98 ஆக உயர்வு


இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 98 ஆக உயர்வு
x
தினத்தந்தி 6 Aug 2018 10:45 PM GMT (Updated: 6 Aug 2018 9:11 PM GMT)

இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் பலி எண்ணிக்கை 98 ஆக உயர்ந்துள்ளது.

ஜகார்த்தா,

இந்தோனேசியாவில் புகழ்பெற்ற சுற்றுலாத்தளங்களாக விளங்கும் பாலி மற்றும் லம்போக் தீவுகளை நேற்று முன்தினம் மாலை பயங்கர நிலநடுக்கம் தாக்கியது. ரிக்டர் அளவுகோலில் 7 புள்ளிகளாக பதிவான நிலநடுக்கம் பாலி, லம்போக் மட்டும் இன்றி சுற்றி உள்ள நகரங்களையும் கடுமையாக உலுக்கியது.

ஆயிரக்கணக்கான கட்டிடங்கள் இடிந்து விழுந்து தரைமட்டமாகின. நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு திரும்பப்பெறப்பட்டது. இந்த நிலநடுக்கத்திற்கு 19 பேர் பலியானதாக முதல் கட்ட தகவல்கள் வெளியானது. இந்த நிலையில் கட்டிட இடிபாடுகளில் சிக்கி உயிர் இழந்த பலரின் உடலை மீட்பு குழுவினர் மீட்டனர். இதனால் பலி எண்ணிக்கை 98 ஆக உயர்ந்துள்ளது. 200-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து இருக்கிறார்கள்.

நிலநடுக்கத்தின் போது லம்போக் தீவில் வெவ்வேறு ஓட்டல்களில் தங்கி இருந்த சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவை சேர்ந்த மந்திரிகள் 2 பேர் காயம் ஏதும் இன்றி உயிர் தப்பினர். நிலநடுக்கத்தால் உயிர் இழந்த மற்றும் படுகாயம் அடைந்தவர்களில் வெளிநாட்டினர் யாரும் கிடையாது என அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நிலநடுக்கத்தால் பாதிப்புக்குள்ளான பகுதிகளில் முழுவீச்சில் மீட்பு பணிகள் நடக்கின்றன. லம்போக் தீவில் ஒரே வாரத்தில் 2 முறை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது வெளிநாட்டு சுற்றுலா பயணிகளிடையே கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இதன் காரணமாக அவர்கள் அங்கிருந்து கூட்டம் கூட்டமாக வெளியேறுகின்றனர். இதற்காக தனியார் விமான நிறுவனங்கள் கூடுதல் விமானங்களை இயக்கி வருகின்றன.

Next Story